தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் கால் நூற்றாண்டுக் கனவு பேராவூரணியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது.
பேராவூரணியில் நீதிமன்றம் வேண்டும் என்று 1996ஆம் ஆண்டு அப்போதைய எம்எல்ஏ எஸ்.வி.திருஞானசம்பந்தம் அன்றைய முதல்வர் கலைஞரிடம் கோரிக்கை வைத்து வலியுறுத்தினார். அதை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு அனுமதி வழங்கியதோடு பேராவூரணிக்கு நீதிமன்றம் அமைக்க இடம் பார்வையிட்டனர். அப்போது பழைய எம்எல்ஏவான ஆர்.சிங்காரம் பொன்காட்டில் இருந்த தனது வீட்டின் மேல்மாடியை தருவதாக கூறினார். பழையபேராவூரணி கோபால் செட்டியார் தனது இல்லத்தை தருவதாக சம்மதம் தெரிவித்தார். பேராவூரணி அண்ணாசாலையில் கறம்பக்காடு வழக்கறிஞர் தனது கட்டிடத்தை தருவதாக கூறினார்.
2020ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக எம்எல்ஏ மா.கோவிந்தராசு அப்போதைய அமைச்சர் வைத்திலிங்கத்திடம் தனியே கோரிக்கை வைத்து வலியுறுத்தியதோடு, சட்டமன்றத்திலும் பேசினார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின்படி நீதிமன்றம் பேராவூரணியில் திறக்கப்படும் என உறுதிகூறினார். இதுதவிர பேராவூரணி பகுதி வழக்கறிஞர்கள் இரண்டு, மூன்று முறை கூட்டத்தை கூட்டி நீதிமன்றத்தை விரைவில் திறக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து பேராவூரணி வேளாண்மைதுறையின் பழைய கட்டிடத்தை நீதிமன்றம் அமைக்க பார்வையிட்டு வேலைகள் நடைபெற்றது. ஆட்சிமாற்றம் நடைபெற்றது. அதன்பின்னர் தற்போதைய எம்எல்ஏ என்.அசோக்குமார் தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனியே கோரிக்கை வைத்து வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து பேராவூரணி தாலுக்கா அலுவலகம் அருகேயுள்ள பழைய வேளாண்மை அலுவலக கட்டிடத்தில் நீதிமன்றம் திறக்கப்பட்டது. குற்றவியல் வழக்குகளும், மதியம் உரிமையியல் வழக்குகளும் விசாரிக்கப்படும் என வழக்கறிஞர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றனர். புதிய நீதிபதியாக அழகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பகுதி மக்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், சட்டதுறை அமைச்சர் ரகுபதி அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துத்து கொண்டனர்.