கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி அருகே காவிரியின் குறுக்கே ரூ.16 கோடியில் கட்டப்பட்டு வரும் பாலப்பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.
கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரி அருகே, காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலப்பணியை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாலத்தின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், இந்தப்பணியை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த பாலம் மூலம் நகரில் உள்ள ரெட்டிராயர் குளம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட குளங்களில் நீர் நிரம்பும். மேலும் கும்பகோணம் பழைய பாலக்கரை பாலத்தில் பெரும்பாலான நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.
காவிரியாற்றில் இருந்து பிரியும் 5 வாய்க்காலின் மூலம் 4,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இந்த புதிய பாலம் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த ஆய்வின்போது கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், கும்பகோணம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாஸ்கர், கோட்டாட்சியர் லதா, தாசில்தார் தங்க.பிரபாகரன், மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.