சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த முனையம், திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக பல்வேறு தகவல்கள் அடங்கிய செல்போன் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பொதுமக்களும் விரைவில் சினிமா பார்க்கலாம். விமானத்தில் பறப்போரும் வளாகத்தில் உள்ள திரையரங்குக்குச் சென்று படத்தை ரசித்துவிட்டு காட்சிகளை அசைபோட்டபடியே விமானத்தில் பறக்கலாம். அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை. இங்கு இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த முனையம் கட்டும் பணி, இறுதிகட்டத்தை எட்டியுள்ளதே இதற்கு காரணம். 2018ம் ஆண்டு தொடங்கிய பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ளது. பல்வேறு புதிய அம்சங்களுடன் புதிய முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.
புதிய முனையத்தில் பயணிகளை கவரும் வகையில், கலை, கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் ஓவியங்கள், இடம்பெறுகின்றன. முனையத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், விளக்குகள் அனைத்து எரியவிடப்பட்டு அண்மையில் சோதனை நடைபெற்றது.
இன்னும் 2 மாதங்களில் விமான சேவை நிறுவனங்கள், பாதுகாப்பு பிரிவு உள்ளிட்டவை ஒருங்கிணைந்த புதிய பன்னாட்டு முனையத்துக்கு மாற்றப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் பயணிகளை கவரும் விதமாக விமான நிலையத்தின் முன்பகுதியில் 250 கோடி ரூபாய் மதிப்பில், 6 தளங்களுடன் கூடிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 5 திரையரங்குகள் ஹோட்டல்கள், கடைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் இரண்டாயிரத்து 100 கார்களை நிறுத்த பார்க்கிங பகுதியும் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
இதேபோல் பல்வேறு தகவல்கள் அடங்கிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலைய இயக்குநர் சரத்குமார், புதிதாக கட்டப்படும் பார்க்கிங்கில், கார்களை பார்க்கிங் செய்வதற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டார். புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்தில் பொதுமக்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆனால் ஒருங்கிணைந்த முனையத்தில் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சரத்குமார் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் பசுமைப்பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், விரைவில் சென்னை விமான நிலையம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் என்றும் விமான நிலைய இயக்குநர் சரத்குமார் கூறினார்.