புதுக்கோட்டை காவலர் சமுதாயக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டத்தின் சார்பில் சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டத்தின் சார்பில் சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் புதுக்கோட்டை நகராட்சியை சேர்ந்த சமையலர்கள், உதவியாளர்கள் 28 பேர் கலந்து கொண்டனர். இதில் கவுணி அரிசி, முருக்கு, அதிரசம், வடை, சேமியா பாயாசம், முட்டை அவியல், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், கீரை சாதம், புளி சாதம், மாவு உருண்டை வகைகள், கீரை சூப்பு வகைகள், இனிப்பு வகைகள் போன்ற உணவு வகைகள் போட்டியில் கலந்து கொண்டவர்களால் தயார் செய்யப்பட்டிருந்தது.
மாணவர்களுக்காக பள்ளிகளில் சத்துணவு தயார் செய்யும் சமையலர்கள், உதவியாளர்களின் பணிகளை ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்குவதற்காக இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.