தமிழ்நாடு அரசுப் போக்குரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
போக்குவரத்துத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று முடிந்தபிறகு, அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலுரை ஆற்றினார். அப்போது, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை பண பரிவர்த்தனையற்ற பயணச் சீட்டு முறையை அறிமுகப்படுத்துதல், பயண கட்டண சலுகை அனுமதிச் சீட்டுகளை வலைதளம் வாயிலாக வழங்குதல், சென்னை திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனை நவீனமயமாக்கல் மற்றும் தரம் உயர்த்துதல், அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத்துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும் பராமரிப்பதற்காக அரசு நடமாடும் பணிகளை உருவாக்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும், வரும் 12ஆம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே மூன்று வயது குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் வசூலிக்கப்படாதிருந்த நிலையில், இனி ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணிப்பதைத் தடுப்பதற்கு அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கான கட்டணமில்லா பயணம் தொடர்பாக அரசாணை வெளிவந்த உடன், பேருந்துகளில் டிக்கெட் வாங்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.