தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு கொண்டு வந்தவர்களுள் பெரும்பாலோர் வீட்டில் நிம்மதிபெருமூச்சு விடமுடிவதில்லை. அப்படி மனுகொடுத்துவிட்டோம், எல்லம் சரியாகிவிடும் என்று எண்ணி வீட்டில் காத்திருந்த யாரும் தாங்கள் கொடுத்த மனுவை மீண்டும் பார்த்ததில்லை மாறாக ஏமாற்றத்தை மட்டுமே பார்த்திருக்கின்றனர்.
அரசு பணியாளர் தேர்வு எழுதி பொறுப்பேற்றுக் கொண்ட இளைஞர் பட்டாளம் என்னவோ நேரம், காலம் தெரியாமல் வேலை செய்தாலும் கோப்புகளை கையெழுத்திடும் உயர்மட்டம் இதுவரை சற்று மந்தமாகவே இருந்துள்ளது. எத்தனை உண்மை கோப்புகள் இருந்தாலும் அந்தக் கோப்புகள் அனைத்தும் உண்மையிலேயே உண்மைதானா என்பது விவாதமாக மாறி கடைசியில் கரன்சி நோட்டுகள் வந்து சாட்சி சொல்லும் வரை கோப்புகள் கையெழுத்தாவதில்லை.
இதை சாக்காக வைத்து தாசில்தாரின் தரகர்கள் என்று கூறப்படும் நபர்கள் கையெழுத்துக்காக அலையும் பொதுமக்களை நோட்டமிட்டு அவர்களிடம் பனம் பெற்றுக்கொன்டு கையெழுத்து வாங்கி தருவதாக கூறப்படுகிறது.
எல்லா மனுக்களுக்கும் இந்த நிலைமை இல்லை என்றாலும் பல நேரங்களில் பலதரப்பட்ட மனுக்களுக்கு இதுதான் நிலைமை என்பது பொதுமக்களிடமிருந்து நாம் பெற்ற குமுறல். உயர்பதவியில் அதிகாரப் பொறுப்பு வகித்த ஒருவர் பணி ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு குடிபெயரும் பொருட்டு வாங்கி வைத்திருந்த இடம், வேறு ஒரு பெயரில் பதியப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அதனை சரிசெய்ய பல முறை அலைந்து திரிந்தும், சில நேரங்களில் லஞ்சமாக கரன்சிகளை வழங்கியும் கூட நடவடிக்கை ஏதும் இல்லாததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி மாரடைப்பில் இறந்து போன சம்பவம் இந்த அலுவலகம் கண்ட வரலாறு.
உயிரை பரிசாக கொடுத்தும் இன்று வரை அந்த மனுவிற்கு தீர்வு காணப்படவில்லை என்பது துயரத்தின் உச்சம். உயர்பதவி வகித்த அதிகாரிக்கு இந்த நிலை என்றால் சாமானியனின் நிலையை நம்மால் எண்ணிப்பார்க்க முடிகிறது. இதற்கு முன்னிருந்த தாசில்தாரின் வரலாறு இப்படி இருக்க சமீபத்திய தாசில்தார் திரு கணேஷ்வரன் வரலாறோ அதன் தொடர்கதையாகவே இருந்து வந்துள்ளது.
எடுத்துக்காட்டாக பட்டுக்கோட்டை தாலுகா சரகத்தில் உள்ள பகுதி பைங்காட்டுவயல், கழுகப்புலிலக்காடு பஞ்சாயத்து உள்ளடங்கிய பகுதியில் இரவு, பகல் பாராமல் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் அதை கண்டுகொள்ளாமல் இருக்க ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக அரசியல் ஒற்றன் மாத இதழில் செய்தியாகவே வெளியிடப்பட்டிருக்கிறது.
அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் கடந்த 100 ஆண்டுகளாக மக்கள் குடியிருந்து வந்ததால் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அவரவர் அனுபவத்தில் இருந்த இடத்திற்கு அரசால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யும்போது முறையாக பட்டா விசாரணை செய்து பதிவேற்றம் செய்யப்படாத காரணத்தால் தவறுகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் அந்த தவறுகள் இன்று வரை சரி செய்யப்படாமல் இருப்பதும், பட்டா வழங்கப்பட்ட இடம் இன்று வரை போக்குவரத்து செய்யப்படாமல் இருப்பதும் யாருடைய தவறு? முப்பது ஆண்டுகளுக்கு முன் படிப்பறிவில்லாத தலைமுறை இதை எப்படி சரி பார்த்து இருக்க முடியும்? குப்பன் என்ற பெயரில் பட்டா வழங்கிவிட்டு கிராம கணக்கில் தவறுதலாக சுப்பன் என்று பதிவிடப்பட்டிருந்தால் அந்த இடம் சுப்பனுக்கு சொந்தம் ஆகிவிடுமா? அப்படியானால் கொடுக்கப்பட்ட பட்டாவிற்கு என்ன பதில்? இதுபோன்ற தவறு ஏற்பட்ட இடம் ஒன்று சமீபத்தில் அறியப்பட்டு மனு வழங்கப்பட்டதன் பேரில் மூன்றாண்டுகளாக ஆட்சியர், கோட்டாட்சியர் பதவியில் இருந்த அனைவரும் தீர்வு காண பரிந்துரைத்தும் இன்று வரை தீர்வு காணப்படவில்லை.
இதை வட்டாட்சியரிடம் கொண்டு சென்றபோது ‘முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் என்ன செய்தீர்கள்?’ என்று கேள்வி கேட்பது எத்தகைய அறிவார்ந்த செயலாக இருக்கும் என்பது வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள். இது தன்னைப் போன்ற ஒரு அதிகாரியின் மெத்தனப் போக்கால் ஏற்பட்ட தவறு என்பதை கூட அறியாமல் ஏற்பட்ட தவறை பொதுமக்கள் மீது சுமத்துவது எந்த வகையில் நியாயம் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் இதேபோன்று ஒரு தவறு ஏற்பட்ட இடத்திற்கு வெறும் மூன்று மாதத்திற்குள் கேள்வியில்லாமல் உத்தரவு பிறப்பித்தது மட்டும் எந்த வகையில் சாத்தியம் என்பதும் நமக்குத் தெரியவில்லை.
சமீபத்தில் கூட அரசு காவல்துறையில் பணியில் இருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் மனைவி கொடிய கொரோனாவால் உயிரிழந்தார். பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகளில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைப்பதற்கான மனு மீதான ஒப்புகை கையெழுத்து பெற மூன்று வாரங்கள் வரை இறந்துபோன காவல் அதிகாரியின் மகள் அலைக்கழிக்கப்பட்டு, ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரை கையெழுத்திடப்படாமல் இருந்ததும், தாசில்தாரின் தரகர் என்று கூறப்படும் ஒருவர் 2,000 ரூபாய் பெற்றுக்கொண்டு ஒரு மணி நேரத்திற்குள் வட்டாட்சியர் கணேஷ்வரனிடம் கையெழுத்து பெற்றுத்தந்ததும் போன்ற சில சம்பவங்கள் நம்மிடம் ஆதாரப்பூர்வமாகவே உள்ளது.
இந்த தாசில்தாரிடம் வேலை செய்ய முடியாது என்று கருதிய திறமையான கீழ் நிலை அதிகாரிகள் சிலர் விருப்ப பணியிட மாறுதல் கேட்டு வேறு இடங்களுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. ஒரு இடத்தின் ஆய்வுக்காக சென்றுவிட்டு சென்ற இடத்தை பார்வையிடாமலேயே அறிக்கை கேட்பதும், கொடுப்பதும், ஒரு இடத்தின் மீது உத்தரவு பிறப்பித்து விட்டு உத்தரவு பிறப்பித்த இடத்திற்கு ஆய்வுக்கு செல்வதும், தான் இட்ட உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளை நிறுத்துவதும், ஒரு மாதத்தில் பணி நிறைவு பெற இருக்கும் வட்டாட்சியரின் வயது மூப்பின் காரணமாக நடந்த சம்பவங்கள் என்று நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ள முயற்சித்தாலும், தான் ஒரு வட்டாட்சியராய் உத்தரவிடப்பட்ட கோப்புகளை ரத்து செய்யவோ உத்தரவின் பேரில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்தவோ கோட்டாட்சியருக்கே அதிகாரம் உள்ளது மாறாக தனக்கு அதிகாரமில்லை என்பதைக்கூட உணர மறந்ததும், பரிந்துரை கடிததில் கையெலுத்திட்டால் தன் ஓய்வூதியத்திற்கு ஆபத்து வரும் என்று அஞ்சுவதும், ஒரு வட்டாட்சியர் என்ற தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரி என்பதால் நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.
தற்போது தாசில்தார் கணேஷ்வரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டார் என்றாலும் மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் மட்டும் இதை தொடரமாட்டார் என்பது என்ன நிச்சயம்? இவ்வாறு தனி தலைமையாக செயல்படுவதை தவிர்க்கவே துணை அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களும் இது போன்ற தவறுகளை சுட்டிக்காட்டி அறிவுறுத்த தவறியது சற்று வேதனை அளிக்கிறது.
பதவியேற்று மூன்று மாதங்களில் பல மனுக்கள் மீது நவடிக்கை எடுத்து சாமன்ய மக்களின் குறைதீர்க்கும் கோட்டாட்சியர் திரு.பிரபாகர் அவர்களும் அவரின் தலைமை உதவியாளராக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து இதுவரை மிகச்சிறப்பாக பனியாற்றி கொன்டிருக்கும் திரு.தர்மேந்திரா போன்ற அதிகாரிகளால் தான் வருவாய்த்துறை சற்றே இயங்குகிறது.
இருப்பினும் இவர்கள் இருக்கும் அலுவலகத்திலே பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. சாதி அடிப்படையிலான ஏற்ற தாழ்வு மனப்பான்மை மூலம் ஏற்பட்ட அலுவலக ஒத்துழைப்பு வழங்காத பிரச்சனை கூட மனுவாக ஆட்சியர் அலுவலத்தில் உள்ளது என்பது வேதனை. சாமன்ய மக்களை சந்திக்க நேரம் ஒதுக்க கோட்டாட்சியர் தவறியதில்லை என்றாலும், எல்லா நேரங்களிலும் அது சாத்தியமில்லை என்பது நிதர்சனம். கீழ்நிலை அதிகாரிகள் இதை உணர்ந்தும் ஒத்துழைப்பு தராமல் சில சமயம் கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் வந்த சாமான்யர்களின் மனுக்கள் மீதான தீர்வுகளுக்கு வழிவகை செய்யாமல் இழுத்தடிப்பது கவலையலளிக்கிறது. வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைத்த கோட்டாட்சியர் இது போன்ற மந்தமான அலுவலக பணி நிலையை விரைவில் மாற்றுவார் என்று நம்புவோம்.
அதிகாரிகள் மீது புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் கோட்டாட்சியர் திரு.பிரபாகர் அவர்களுக்கும், வழக்கறிஞர் பட்டம் பெற்று ஏற்கனவே பட்டுக்கோட்டையில் வட்ட வழங்கல் அலுவலராயிருந்து வட்டாட்சியராய் பொறுப்பேற்று டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலின் போது பம்பரமாய் சுழன்று சிறப்பாக செயல்பட்டு மக்களின் பாராட்டுக்களை தனதாக்கிய, மீண்டும் வட்டாட்சியராய் பொறுப்பேற்கும் திரு.ராமச்சந்திரன் அவர்களுக்கும் மென்மேலும் பணி சிறக்க பொது மக்கள் சார்பாகவும் நீதியின் நுண்ணறிவு இதழ் சார்பாகவும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.