தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காட்டில் பேராவூரணி- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்திருக்கும் டாஸ்மாக்கில் விடியற்காலை முதல் நள்ளிரவு வரை அரசு அனுமதித்த நேரம் தவிர கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படும் காரணத்தினால் காலை முதலே கூட்டம் களை கட்டும். டாஸ்மாக் பிரதான சாலையில் அமைந்திருப்பதால் மது போதையில் தள்ளாடி சாலையின் குறுக்கே வருவதும் சாலையோரம் விழுந்து கிடப்பதும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
இரவு நேரங்களில் ஒட்டங்காடு பேருந்து நிறுத்தத்தில் மின்விளக்கு இல்லை என்ற காரணத்தால் மதுப்பிரியர்கள் பேருந்து நிறுத்த நிழற்குடைகளிள் மதுபானம் அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கேயே உடைப்பதாலும் அசுத்தம் செய்வதாலும் காலையில் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் நிழற்குடையை உபயோகப்படுத்த முடியாத சூழலை உருவாக்கி சாலையோரம் நின்று புத்தகப்பைகளை தோலில் சுமந்தவாரே பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இந்த நிலை இப்படி இருக்க கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பதாகவும் நமக்கு அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
இதுதொடர்பாக கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை இல்லை. டாஸ்மாக்கை இடமாற்றம் செய்ய பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் கோரிக்கைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளது. அரசு சார்பாக செய்திகளை மக்களிடமும் மக்களின் குறைகளை மக்கள் சார்பாக அரசின் கவனத்திற்கும் கொண்டுசேர்க்கும் பத்திரிக்கைத் துறையில் இருக்கும் நாமே மனு கொடுத்தும் அதன்பேரில் நடவடிக்கை இல்லை.
இதற்கு டாஸ்மாக்கை நடத்துபவர்கள் அரசியல் பின்புலம் பெற்றவர்கள் என்றும் அனைத்து கட்சி ஆதரவு பெற்ற நிர்வாகிகள் அனைவரும் டாஸ்மாக் நடத்த ஒத்துழைப்பு தருவது தான் காரணம் என்றும் பெரும்பான்மை மக்களால் பேசப்படுகிறது. இந்த டாஸ்மாக் அருகே சிறிய பாசன வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது நள்ளிரவு வரை மதுவிற்பனை உள்ளதால் இரவு நேரங்களில் இந்த பாலத்தில் அமர்ந்து மது அருந்துவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு பாலத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு போதை தலைக்கேறி பாலத்திலிருந்து தடுமாறி பாலத்திற்கு அடியில் விழுந்து மூச்சு விட முடியாமல் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் எத்தனைபேர் என்பது நமக்கு தெரியாது.
ஆண் குடிக்க செல்வதையும் தடுக்கமுடியாமல் தடுமாறி கொண்டிருக்கும் பெண்களிடையே குடிக்கச் சென்ற ஆண் மகன் உயிரோடு வீடு திரும்புவாரா என்ற எதிபார்த்து காத்திருக்கும் பெண்களின் நிலைமை கவலைக்குரியது.