சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் செயலாளர்களாக, மாவட்ட ஆட்சியர்களாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்தது. அந்த வகையில், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த விஜய ராணி சென்னை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
2013 கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான விஜய ராணி புத்தகம் ஒன்றையும் எழுதி இருக்கிறார். இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியராக விஜய ராணி நியமிக்கப்பட்டு ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில் புதிய ஆட்சியரை மாற்றியுள்ளது தமிழ்நாடு அரசு. விஜய ராணி அடுத்து எங்கு மாற்றப்பட்டு இருக்கிறார் என்ற விபரமும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், விஜயராணிக்கு மாற்றாக அமிர்த ஜோதி சென்னை மாவட்ட ஆட்சியராக செயல்படுவார் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அமிர்த ஜோதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.