தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சி ஒட்டங்காடு கடைவீதியில் சத்திரகுளம் கிழக்கு பகுதி கரையில் பேராவூரணி செல்லும் பிரதான சாலையோரம் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான இடம் ஊராட்சிமன்ற தலைவரின் உறவினர் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரிந்து பொதுமக்கள் சிலரிடம் விசாரித்தபோது, ஒட்டங்காடு ஊராட்சியின் தலைவராக ராஜாகண்ணு என்பவர் பதவியில் உள்ளார்.
கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது இவரை எதிர்த்து போட்டியிட்ட இவரின் உறவினர் R.N.செல்வராசு என்பவர் சில ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதன்பிறகு ஊராட்சி தலைவரின் செயல்பாடற்ற தன்மை குறித்து செல்வராஜ் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இவரின் எதிர்ப்பை சமாளித்து சமாதானம் செய்யும் வகையில் செல்வராசு தலைவராக உள்ள (பதிவு செய்யப்படாத) மோட்டார் வாகன உரிமையாளர் சங்கம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்திற்கு முறைகேடாக மின்இணைப்பு பெற்று தந்துள்ளார். தற்போது ஊராட்சிக்கு சொந்தமான இன்னொரு இடத்தையும் செல்வராசுக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளார். தலைவரின் தனிப்பட்ட பகையை தீர்த்து கொள்வதற்கு இவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொதுஇடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதற்கு எப்படி அனுமதி அளிக்கலாம். இவர் ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பொதுமக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதிகாரிகளிடம் பேசி எந்த திட்டத்திற்கும் இவரால் ஒப்புதல் பெறமுடிவதில்லை. மாறாக மக்கள் விரோத செயல்பாடுகளில் தான் ஈடுபடுகிறார் என்பதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
நமது இதழில் இவரின் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து செய்தி வெளியிட்டு இருக்கிறோம். ஆக்கிரமிப்பு இடத்திற்கு முறைகேடாக மின்இணைப்பு பெற்றது குறித்தும் செய்தி வெளியிட்டு இருக்கிறோம். நமது கேள்வி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை எந்த தகுதியின் அடிப்படையில் தனிநபருக்கு ஒதுக்கீடு செய்து உள்ளார்? மேற்படி இடம் கடைவீதியின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது. ஊராட்சியின் வருவாயை பெருக்கும் பொருட்டு அந்த இடத்தில் காய்கறி மார்கெட் அமைக்கலாம் அல்லது வணிக வளாகம் கட்டலாம் ஆக இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள்பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். ஏற்கனவே ஒட்டங்காடு ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு துறைகளுக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் மீட்க முடியாமல் உள்ளது.
இந்நிலையில் புதிய ஆக்கிரமிப்புக்கு அனுமதி அளிக்கும் ஊராட்சி மன்ற தலைவரின் தன்னிச்சையான செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது என கூறும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை எதிர்பார்க்கின்றனர். இச்செய்தி குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரின் உறவினர் R.N.செல்வராசு ஆகியோர் உரிய விளக்கம் அளித்தால் அதை வெளியிட தயாராக உள்ளோம்.