கோவில்களில் திருமண பதிவுக்காகவும், சமூக நலத் துறை உதவித்தொகை பெறுவதற்காகவும், கிராம நிர்வாக அலுவலர்களான வி.ஏ.ஓ.,க்கள், திருமண சான்று வழங்க கூடாது என, வருவாய்த் துறை உத்தரவிட்டுள்ளது.
அறநிலையத் துறை கோவில்களில் திருமணம் செய்வோர், தங்களுக்கு இது தான் முதல் திருமணம் என்பதை உறுதி செய்ய, வி.ஏ.ஓ.,க்களிடம் இருந்து முதல் திருமண சான்று பெற்று சமர்ப்பிக்கின்றனர்.
சமூக நலத் துறையின் திருமண உதவித்தொகை பெறுவதற்கும், இத்தகைய சான்று பெற, பொது மக்கள், வி.ஏ.ஓ.,க்களை அணுகுகின்றனர். இதுபோன்ற சான்றிதழ் வழங்க, எவ்வித அரசாணையும், வழிகாட்டுதல்களும் இல்லாத நிலையில், வி.ஏ.ஓ.,க்கள் கோரிக்கை அடிப்படையில் சான்றிதழ்களை வழங்குகின்றனர். இதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வருவாய் நிர்வாக துறை, பதிவுத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதம்: வி.ஏ.ஓ.,க்கள், திருமண சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சார் – பதிவாளர் அலுவலகங்கள், இந்து சமய அறநிலையத் துறை கோவில் நிர்வாகங்கள், திருமண பதிவின் போது வி.ஏ.ஓ.,க்களிடம் இருந்து, முதல் திருமண சான்று பெற்று வருமாறு கேட்க வேண்டாம்.
இதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட நபர் திருமணமாகாதவர் என்பதற்கான, வருவாய்த் துறையின் சான்று இ – சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன. இதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.