தென் இந்தியாவின் சிறந்த கிருத்துவ மதபோதகரான பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவரால் 1715- ம் ஆண்டு தமிழில் முதன் முதலாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, அச்சிடப்பட்ட ஒரு அரிய வகை பைபிள் (புதிய அத்தியாயம்) அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக அந்த சமயத்தில் வழங்கப்பட்டது. அந்த பைபிள் பிற்காலத்தில் தமிழக அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் அருங்காட்சியகத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு காணமல் போய்விட்டது. இந்த திருடப்பட்ட பைபிளானது கிங்ஸ் கலெக்ஷன் என்ற லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் இருப்பதாக வலைதளத்தில் சிலை திருட்டு தடுப்பு பிரிவினரின் புலன் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி பைபிள் சரஸ்வதி மகால் நூலகம் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை யுனேஸ்கோ ஒப்பந்தத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கு திரும்ப கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சிறப்பான பணியினை செய்த தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினரை தமிழ்நாடு டிஜிபி முனைவர் சி.சைலேந்திர பாபு IPS., அவர்கள் பாராட்டினார்கள்.