மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன், 332 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
அப்போது அரசு கூடுதல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, “மனுதாரரின் ஜாமீன் மனு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்திலும், ஐகோர்ட்டிலும் ஏற்கனவே தள்ளுபடியாகியுள்ளது. நீதிமன்ற விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தன் தந்தையின் இறப்புக்காக 3 நாள் இடைக்கால ஜாமீனும் பெற்றுள்ளார். இதை மறைத்து தற்போது ஜாமீன் கோரி மீண்டும் மனு செய்துள்ளார். எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது. இ-கோர்ட் வெப்சைட்டில் வழக்கு விபரங்களை முறையாக பதிவு செய்தால் இதுபோன்ற நிலையை தவிர்க்கலாம்” என்றார்.
இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“நீதிமன்ற நடைமுறைகளை சுலபமாக அறிந்து கொள்ளும் வகையில் இ-கோர்ட் எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், எப்ஐஆர், வழக்கு விசாரணை, ஜாமீன், காவல் நீட்டிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான விபரங்களும் இடம் பெற வேண்டுமென ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கீழமை கோர்ட் வழக்கு விபரங்களை போதுமான அளவுக்கு பதிவேற்றம் செய்வதில்லை. முறையாக பதிவேற்றம் செய்திருந்தால் தேவையான விபரங்களை அறிந்து கொள்ள முடியும். இதை மனுதாரரைப் போன்றோர் சாதகமாக பயன்படுத்துகின்றனர்.
எனவே, உண்மையை மறைத்து, சுத்தமான கரங்களுடன் கோர்ட்டை நாடாததால் இந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இ&கோர்ட் இணையதளம் பதிவேற்றம் தொடர்பாக கடந்த 29.8.2013லேயே வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்த சுற்றறிக்கையின்படி, விசாரணை, ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கல் மற்றும் நிராகரிப்பு தொடர்பான உத்தரவு நகல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இ-கோர்ட் இணையதளத்தில் உடனடியாக பதிவேற்ற வேண்டும்.
ஐகோர்ட் கிளை பதிவாளர் ஜெனரல் தரப்பில், அனைத்து கீழமை கோர்ட்களுக்கும் குறிப்பாக ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் விசாரணை கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களையும் இ-&கோர்ட் வெப்சைட்டில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டுமென்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.”
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.