புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த 5 விசைப்படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5,00,000 வீதம் ரூ.25,00,000 க்கான காசோலைகளை விசைப்படகு உரிமையாளர்களிடம் ஆட்சியர் வழங்கினார்.
மேலும், நீரில் மூழ்கி உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் புதுத்தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் அவரது மகன் முகமது சாலிக் ஆகியோரது குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.2,00,000 க்கான காசோலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.46,376 மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் என மொத்தம் ரூ.27,46,376 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.