இந்தியாவில் காவல்துறை, பாதுகாப்பு படைகளின் பிரிவுகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரமான ‘குடியரசுத் தலைவர் கொடி’ அங்கீகாரம் தமிழ்நாடு காவல்துறைக்கு இன்று வழங்கப்பட்டது.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த சிறப்பு மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, இந்த ‘குடியரசுத் தலைவர் கொடியை’ தமிழ்நாடு காவல்துறைக்கு வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் கொடியை பெற்றுக் கொண்டார்.
இந்த ‘குடியரசுத் தலைவர் கொடி அங்கீகாரம் என்றால் என்ன? அது யாருக்கு எப்போது வழங்கப்படும்? இதற்கு முன் பெற்ற மாநிலங்கள் எவை ஆகியவை குறித்து காண்போம்.
குடியரசுத் தலைவர் கொடி அங்கீகாரம் என்றால் என்ன?
இந்தியாவில் சிறப்பான முறையில் பணியாற்றிய பாதுகாப்புப் படை பிரிவுகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் இது.
1951ஆம் ஆண்டு இந்திய கடற்படைக்கு இந்த அங்கீகாரம் முதல்முதலாக வழங்கப்பட்டது. இதுவரை கடற்படை மற்றும் விமானப்படையின் பிரிவுகள் இந்த அங்கீகாரத்தை பெருமளவு பெற்றுள்ளன.
ஆனால், இந்திய மாநிலங்களின் காவல்துறைகள் இதைப் பெறுவது அரிதாகவே நடைபெற்றுள்ளது.
தென்னிந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாடுதான் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு உட்பட இதுவரை 10 மாநிலங்கள் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளன.
உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, இமாசல பிரதேசம், குஜராத், ஜம்மு காஷ்மீர், திரிபுரா, ஹரியானா, டெல்லி, அசாம் ஆகியவை இந்த அங்கீகாரத்தை பெற்ற பிற மாநிலங்கள் ஆகும்.
தமிழ்நாட்டுக்கு இப்போதுதான் கிடைக்கிறதா?
இல்லை. உண்மையில் இந்த விருது பெறும் ஐந்தாவது இந்திய மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாடு காவல்துறை கடந்த 2009ஆம் ஆண்டு தனது 150ஆவது ஆண்டை கொண்டாடியது. அதை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறைக்கு இந்த அங்கீகாரம் அறிவிக்கப்பட்டது.
அதுதான், 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் உரையாற்றும்போது “இதற்கு முன்பு பலமுறை இந்த விருதைப் பெற முயற்சி செய்தும் முடியாததால், தற்போது இந்த விருது பெற்றுத்தரப்பட்டுள்ளது” என்று டிஜிபி சைலேந்திரபாபு பேசியது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடியில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்துடன் வாய்மையே வெல்லும் எனப் பொறிக்கப்பட்டு, தமிழகக் காவல்துறையின் சின்னத்தைப் பொருத்தி சிறப்புப் பட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்துக்கு நிசான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சின்னம் பொறித்த பட்டையைக் டிஜிபி முதல் காவலர் வரை அனைவரும் தங்கள் சீருடையில் அணிந்து கொள்ள வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.