முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்கள் பாய்மர படகுகள் மூலம் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று மீண்டும் சென்னை வந்தடைந்தது உலக சாதனை படைத்ததற்காக நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும், இச்சாகச பயணம் மேற்கொண்டதற்காக தமிழ்நாடு காவல் துறையின் கடலோர பாதுகாப்புக்குழுவுக்கு உலக சாதனை புத்தகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழை, முதல்-அமைச்சரிடம் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் காவல் துறை இயக்குநர் சந்திப் மித்தல் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இதேபோல் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப்போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல் துறையை சேர்ந்த 13 பேரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், போலீஸ் டி.ஜி.பி. (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை) கந்தசுவாமி, கூடுதல் டி.ஜி.பி. (ஆயுதப்படை) அபய்குமார் சிங் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.