பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை. இது எந்த ஒரு உண்மை சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டது அல்ல. ஆகவே நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இக்கதையின் மூலம் ஏற்படும் மன உளைச்சலுக்கோ, குழப்பங்களுகோ நிர்வாகமும் ஆசிரியரும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மருத்துவமனை முன் வாகனம் நின்றதும் வாகனத்தை விட்டு இறங்கிய ஜான் மேகக் கூட்டங்களில் இருந்து வெளிவந்த கழுகைப் போல தெளிவான பார்வையும் உடல் திடத்தையும் பெற்றது போல உணர்ந்தார். சற்றுமுன் வரை படபடப்பாக இருந்த முத்துவும் ஜானின் திடத்தை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.
“என்ன ஜான் ஸார் ஓகேவா?” என்று கேட்டார் முத்து. “இப்பதான் முத்து தெளிவா இருக்கு இவ்வளவு நேரம் என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை, சரி வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க” என்று கேட்ட ஜானிடம் “வீட்ல இருக்கிறதெல்லாம் இருக்கட்டும் இன்னும் ரெண்டு நாள்ல வந்துருவாங்க,நானே அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். இப்ப ஹாஸ்பிடல் உள்ளே போகணும் வாங்க”என்று கூறினார் முத்து. சிரித்துக்கொண்டே இருவரும் மருத்துவமனையின் உள்ளே நடந்தனர்.
பார்வையாளர் நேரத்தில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த கமிஷனரின் காதில் ஜான் மயங்கிய செய்தி சென்றடைந்தது.செய்தி கேட்டதும் மீதமுள்ள பொதுமக்களை உதவி கமிஷனரிடம் அனுப்புமாறு தனது உதவியாளரிடம் கூறிவிட்டு தனது இருக்கையில் இருந்து எழுந்து ஜான் மயங்கியபோது உதவிய அதிகாரியை பார்ப்பதற்காக தன் அறையை விட்டு வெளியே வந்தார் கமிஷனர்.
பரபரப்பாக இருந்த தளம் கமிஷனர்,அறையிலிருந்து வெளியே வந்ததும் நிசப்தமானது. “மிஸ்டர் ஜானை அட்டென்ட் பண்ணது யாரு சார்” என்று கேட்ட கமிஷனரிடம் “நான் தான் சார்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் ஜானுக்கு தண்ணீர் கொடுத்த அதிகாரி. “ஓ மிஸ்டர் பைசல்! நல்ல வேலை செஞ்சீங்க, நீங்க ஹெல்ப் பண்ணவருதான் மிஸ்டர் ஜான் அவர பத்தின டீடெயில்ஸ் உங்க கையில் இருக்கும் மத்ததை மீட்டிங்ல டிஸ்கஸ் பண்ணுவோம். கிளம்பலாமா ? எல்லாம் ரெடியா? என்று கேட்ட கமிஷனரிடம் “ எஸ் சார் எவரிதிங் இஸ் ரெடி நம்ம கிளம்பலாம் “ என்றார் அந்த அதிகாரி. “எந்த விஷயமாக இருந்தாலும் டெபியூட்டி கமிஷனரிடம் சொல்லுங்க நான் இன்னைக்கு லீவு” என்று தன்னுடைய உதவியாளரிடம் கூறிவிட்டு அந்த அதிகாரியுடன் படிக்கட்டுகளில் இறங்க தொடங்கினார் கமிஷனர். என்ன நடக்கிறது என்று புரியாமல் சல்யூட் அடித்த வாறு நின்றுகொண்டிருந்தார் கமிஷனரின் உதவியாளர்.
காவலர் உடையில் இருந்ததால் மருத்துவரை சந்திப்பதற்கு காத்திருக்க வைக்காமல் நேரடியாக மருத்துவரின் அறைக்கு ஜானையும் முத்துவையும் அழைத்துச் சென்றார் மருத்துவமனை வரவேற்பாளர் உள்ளே இருந்த நோயாளியை சற்று வெளியே அமர சொல்லிவிட்டு ஜானை சோதித்த மருத்துவர் சில பரிசோதனைகளை உடனடியாக எடுக்கசொல்லி செவிலியரிடம் கூறிவிட்டு முத்துவிடம் மருந்துசீட்டு ஒன்ரை நீட்டி “சார் டெஸ்ட் எல்லாம் எடுக்க சொல்லி இருக்கிறேன். ஒரு சில ரிசல்ட் அரை மணி நேரத்தில் வந்து விடும். மற்ற எல்லாம் நாளைக்கு வாங்கிக்கலாம் சார். அரை மணி நேரம் கழித்து ரிசல்ட் வந்தவுடன் என்னவென்று பார்த்துக்கொண்டு அதுக்கப்புறம் மெடிசன் பற்றி யோசிக்கலாம் இப்போ இவரை கூட்டிட்டு போய் டெஸ்ட் கொடுத்துட்டு வெயிட் பண்ணுங்க சார்” என்றார் மருத்துவர். “சரி ஓகே சார்” என்று கூறிவிட்டு ஜானை அழைத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தார் முத்து.
வீட்டில் துணைக்கு யாரும் இல்லாமலும், தன் கணவரிடமும் பேச முடியாமலும், தன்னுடன் எப்பொழுதும் விளையாடும் செல்லப்பிராணியின் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருப்பதாலும் கிறிஸ்டினா அவர்களுக்கு பொழுது போக்குவது கடினமாகவே இருந்தது. எத்தனை நேரம் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் இன்று ஏனோ கிறிஸ்டினாவிற்கு தனிமை வெறுப்பாக இருந்தது. “அந்த வீட்டில் திருட்டு,இந்த வீட்டில் கொலை” என்ற செய்திகள் பார்க்கும்போது கிறிஸ்டினாவிற்கு தனிமை சற்று பயத்தையும் சேர்த்தே தந்தது. மாற்றங்களுக்கு பழகிப் போனவர் ஜான் மட்டும் இல்லை என்றாலும் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து முறையாவது போன் செய்யும் தனது மகள் இல்லாத இந்த மாற்றம் கிறிஸ்டினாவுக்கு பழகிக்கொள்ள இன்னும் சில வருடங்கள் ஆகும் என்ற நிலைமையில் தான் இருந்தது.
அரை மணி நேரத்தில் ஜானின் பரிசோதனை முடிவுகள் வந்து சேர்ந்தன. பரிசோதனை முடிவுகளை பார்த்த மருத்துவர். ஜானையும் முத்துவையும் உள்ளே அழைக்கும்படி செவிலியரிடம் கூறினார். தன் பரிசோதனை முடிவுகளைப் பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து தனது கண்களை மூடிக்கொண்டு தன் மகளின் நினைவுகளை கண்முன்னே ஓட்டிக் கொண்டிருந்த ஜானையும் அவரின் அருகே அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த செய்திகளை கவனமாக கவனித்துக் கொண்டிருந்த முத்துவையும் “சார் உங்கள டாக்டர் கூப்பிடுறாங்க” என்று வந்து கூறிவிட்டு மீண்டும் மருத்துவர் அறையை நோக்கி நடந்தார் செவிலியர். “ஜான் வங்க போவோம்” என்றார் முத்து.செவிலியரை பின்தொடர்ந்து ஜானும் முத்துவும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தனர்.”வாங்க சார்,உட்காருங்க”என்றார் டாக்டர். இருவரும் டாக்டர் முன் போடப்பட்டிருந்த இருக்கையில் மெதுவாக அமர்ந்தனர் முத்துவின் முகத்தில் இருந்த படபடப்பும் எதிர்பார்ப்பும் ஜானின் முகத்தில் அறவே இல்லை.
“சார் ரிசட்டு என்ன ஆச்ச” என்றார் முத்து. ”ஒன்னும் இல்ல சார்,இவருக்கு உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் ரத்த அழுத்தம் மட்டும் கொஞ்சம் கம்மியாக இருக்கிறது வேறு எந்த பிரச்சனையும் இல்லை. இன்னும் கொஞ்சம் ரிசல்ட் எல்லாம் வர வேண்டி இருக்கு அது ஈவினிங் தான் வரும் சோ நாளைக்கு டைம் இருந்தா வாங்க வேறு ஏதாவது பிரச்சனை இருக்கான்னு பார்த்துட்டு அதுக்கு அப்புறமா தேவைப்பட்டால் மெடிசின் எடுத்துக்கலாம் ஆனா இப்போதைக்கு தேவையில்லை” என்றார் டாக்டர். முகத்தில் புன்னகையுடன் முத்துவும்,சலனமில்லாமல் ஜானும் “தேங்க்யூ சார்” என்று கூறிவிட்டு டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்தனர்.
ஜானின் செல்போனும் முத்துவின் செல்போனும் ஒரே நேரத்தில் சினுங்கியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்களது செல்போன்களை எடுத்தனர். இருவருக்கும் மெசேஜ் வந்திருந்தது. அதில் “கோ டு திஸ் பிளேஸ் வித்தின் ஒன் ஹவர்” என்று நகரத்தின் வரைபடத்தில் ஒரு இடம் குறிக்கப்பட்டு இருந்தது. அடுத்தடுத்து இரண்டு மெசேஜ்கள் இருவருக்கும் ஒன்றாகவே வந்தது அதில் “அரசு வாகனமும்,சொந்த வாகனம் பயன்படுத்தக்கூடாது தனியார் வாடகை வாகனத்தில் வரவும்” என்று அழுத்தமாக பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்தது
பல சல்யூட்களுக்கு நடுவே கம்பீரமாக நடந்து வெளியே வந்த கமிஷனரும்,உடன் வந்த அந்த அதிகாரியும் தன்னை அழைத்து செல்ல என்னேரமும் ஆயத்தமாக நிற்கும் அரசு வண்டியை பயன்படுத்தாமல் தான் ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த தனியார் வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். ஆனால் இவர்கள் இருவரும் எங்கு செல்கிறார்கள் என்று அலுவலகத்தில் யாரிடமும் கூறாததாலும் வந்த கொஞ்ச நேரத்திலே உதவியாளர் இல்லாமல் கமிஷனர் கிளம்புவதும் அலுவலகத்தில் இருந்த பலருக்கு புதிதாகவும் புதிராகம் இருந்தது.
வாகனத்தில் ஏரியதும் “எல்லாருக்கும் லொக்கேஷன் அனுப்பியாச்சா” என்று கேட்ட கமிஷனரிடம் “எஸ்சர் எல்லாருக்கும் அனுப்பியாச்சு இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் எல்லாரும் ஸ்பாட்டில் இருப்பாங்க” என்று கூறினார் அந்த அதிகாரி. அந்த வாகனமும் ஜானுக்கும் முத்துவிற்கும் மெசேஜில் கிடைக்கப்பெற்ற அந்த இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது..
( தொடரும்…)