பொறுப்பு துறப்பு
இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை. இது எந்த ஒரு உண்மை சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டது அல்ல ஆகவே நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இக்கதையின் மூலம் ஏற்படும் மன உளைச்சலுக்கோ, குழப்பங்களுகோ நிர்வாகமும் ஆசிரியரும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜானும் முத்துவும் தங்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்த வாகன ஓட்டுனரிடம் இருவரையும் அழைத்து வந்ததற்கு நன்றி கூறிவிட்டு அவர்கள் இருவருக்கும் மேலும் சில வேலைகள் இருப்பதாக கூறி அரசு வாகனத்தை மீண்டும் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் மருத்துவமனை வாசலில் நின்று கொண்டிருந்த வாடகை வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு நகர வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தை நோக்கி புறப்பட்டனர்.
ஜானுவும் முத்துவும் புதிய காவலர்கள் இல்லை 30 ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையில் பணியாற்றி வருபவர்கள். குறிப்பாக ஜானின் குடும்பம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே காக்கி உடை அணியும் பாரம்பரியம் பெற்ற குடும்பம் என்பதால் தலைமை அலுவலக பதிவேட்டில் தன்னை தொடர்பு கொள்ளக்கூடிய எண் என்று ஒரு எண்ணை கொடுத்து அந்த எண்னை தன் மனைவிக்கு கூட தெரிவிக்காமல் எந்நேரமும் தன் கையில் வைத்திருப்பது ஜானுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான்.
அந்த எண்ணிலிருந்து இதுவரை ஜான் யாரையுமே தொடர்பு கொண்டதில்லை. இப்படி ஒரு எண் இருப்பது ஜானுக்கும், அந்த எண்ணை கொடுத்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கும் ஜானை தொடர்பு கொள்ள பயன்படுத்தும் தலைமை அலுவலகத்திற்கும் மட்டுமே தெரிந்த ஒன்று. பல ஆண்டுகளுக்கு முன்பே தன் நம்பிக்கையை சம்பாதித்த முத்துவிற்கும் ஜான் இதை கற்றுத்தந்ததன் விளைவாகத்தான் தங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் செய்தி வந்தபோது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் அந்த செய்தியின் நம்பகத்தன்மை குறித்து ஆராயாமல் உடனே புறப்பட்டதன் காரணமும் இதுதான். ஒருவேளை ஜானும் முத்துவும் புதிய காவலர்களாக இருந்திருந்தால் அவர்கள் மனதிற்குள் நூற்றுக்கணக்கான கேள்விகள் எழும்பி இருக்கும். தங்களுக்கு கிடைக்கப்பெற்ற செய்தியின் நம்பகத்தன்மை குறித்து தனது உயர் அதிகாரிகளிடம் கேட்டு ஆராய்ந்து கொண்டு பதிலுக்காகக் நேரத்தை வீணடித்து இருந்திருப்பார்கள்.
பொதுவாக சம்பளம் தொடர்பான செய்திகள் தவிர சில முக்கியமான செய்திகள் மட்டுமே இந்த குறிப்பிட்ட ரகசிய எண்ணில் வந்து சேரும் அதனால் வந்திருக்கும் செய்தி முக்கியமானது மட்டும் ரகசியமானது என்று உணர்வால் புரிந்து கொண்டதால்தான் இருவரும் எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனடியாக புறப்பட்டனர் மேலும் இந்த செய்தி வெறும் எழுத்து வடிவில் வந்திருப்பதால் இதைப் பற்றி பேசக்கூடாது என்று அறிந்திருந்த இருவரும் தங்களுக்கு வந்த செய்தி பற்றிய விமர்சனத்தை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவில்லை. வழக்கத்திற்கு மாறாக இருக்கும் இந்த சூழ்நிலையைப் பற்றி இருவருக்குமே மனதிற்குள் கேள்விகள் எழுந்தாலும் அதைப் பற்றி பேசாமல் இது என்னவாக இருக்கும் என்ற யோசனையில் அமைதியாக அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தனர்.
பொதுவாக தன் வாகனத்தில் ஏறும் பயணிகள் தூங்கினாலே தவிர மற்ற நேரங்களில்எதைப்பற்றியாவது பேசிக்கொண்டிருப்பார்கள் ஆனால் இவர்கள் இருவரும் குறிப்பிடத்தக்க வகையில் அமைதியாகவே இருக்கிறார்களே என்று அந்த வாடகை வாகன ஓட்டுனர் குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்ணாடி மூலம் இவர்கள் இருவரையும் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தார். ஒருவழியாக நாமே பேச்சுக் கொடுக்கலாம் என்று முடிவு செய்த ஓட்டுனர் “ஹீரோ யாரு சார்?” என்றார். அமைதியாக இருந்த வாகனத்திற்கு திடீரென்று குரல் கேட்டதால் யாரிடம் பேசுகிறார் என்று அறிந்துகொள்ள ஓரிரு நொடிகள் எடுத்துக்கொண்ட முத்து “என்னையா கேட்டீங்க” என்று ஓட்டுநரை பார்த்து கேட்டார். “ஆமா சார் ஹீரோ யாருன்னு கேட்டேன்” என்றார் ஓட்டுநர்.என்னடா இவன் திடீரென்று சம்பந்தமே இல்லாமல் நம்மிடம் கேள்வி கேட்கிறான் என்று குழப்பத்திலிருந்த முத்து “எனக்கு புரியல தம்பி என்ன கேட்கிறீங்க”என்று ஓட்டுனரை பார்த்து மீண்டும் கேட்டார். சூட்டிங்தான சார் போறீங்க அதான் படத்தில் யார் ஹீரோ என்று கேட்டேன் சார் என்றார் ஓட்டுநர். மீண்டும் எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த முத்துவை பார்த்துவிட்டு குறுக்கிட்ட ஜான் “இல்ல தம்பி எங்களுக்கு எதுவும் தெரியாது அங்க போய் பார்த்தால்தான் எல்லாம் புரியும்” என்றார். “அப்படியா ஓகே சார்” என்றார் ஓட்டுனர்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் ஓட்டுநரையும் ஜானையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் முத்து. அமைதியாக இரு என்பது போல் முத்துவை பார்த்து செய்கை செய்தார் ஜான். புரிந்து கொண்ட முத்துவும் சரி என்று கூறுவது போல் தலையசைத்து சைகை செய்தார். வாகனம் செல்லும் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் இல்லாமல் மீண்டும் மூவரும் அமைதியானார்கள். ஜானின் வாட்ஸ் அப்பில் செய்தி ஒன்று வந்து அமைதியை முடிவுக்குக் கொண்டுவந்தது. என்ன செய்தி வந்திருக்கிறது என்று கைபேசியை எடுத்து பார்ப்பதற்குள் ஜான் தற்போது வேலை பார்த்துக் கொண்டிருக்கும் Z1 ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் இருந்து வழக்கமாக உபயோகப்படுத்தும் எண்ணில் ஜானுக்கு போன் வந்துகொண்டிருந்தது. அழைப்பை ஏற்ற ஜான் “ஹலோ, சொல்லுங்க சார்” என்றார். மறுமுனையில் பேசிய இன்ஸ்பெக்டர் “இன்றிலிருந்து இருந்து உங்களுக்கு இனிமேல் கமிஷனர் ஆபீஸில் தான் டூட்டி உங்களை டிரான்ஸ்பர் செய்து விட்டார்கள் ஆர்டர் அங்கே வாங்கிட்டு இன்னைக்கே ஜாயின் பண்ணிருங்க, ஈவினிங் வீட்டுக்கு போகும்போது எங்களுக்கு ஒரு காப்பி இங்க கொண்டு வந்து குடுத்துட்டு கையெழுத்து போட்டு போயிருங்க. நான் இப்போ வெளியே போய்கிட்டு இருக்கேன் சாயந்தரம் வாங்க ஜான் பேசுவோம்” என்றார். “ஓகே சார் நான் சாயந்திரம் வந்து உங்களை பார்க்கிறேன்” என்று கூறி விட்டு போனை வைத்தார் ஜான்.
வாட்ஸ் அப்பில் வந்த செய்தியும் அதுதான். ஜானின் பணியிட மாறுதலுக்கான ஆணையின் நகல் தான் அது. “யாரு ஜான்” என்றார் முத்து. எதுவும் பேசாமல் வாட்ஸ் அப்பில் வந்த ஆணையை முத்துவிடம் காண்பித்தார் ஜான். போனை வாங்கி படித்து பார்த்த முத்து எதுவும் பேசாமல் தலையசைத்துவிட்டு போனை மீண்டும் ஜானிடம் கொடுத்தார். என்ன நடக்கிறது என்று இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் எல்லாம் முன்னேற்பாடுடன் தான் நடக்கிறது என்று தெரிந்து கொண்ட ஜான் அடுத்து என்ன என்று ஆவலோடு காத்திருந்தார்.வண்டியும் அந்த குறிப்பிட்ட இடத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.
மறுபுறத்தில் கமிஷனர் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் நிலைமையும் கிட்டத்தட்ட இதுதான் முற்றிலும் அமைதியாகவே இருந்தது குறிப்பிட்ட இடத்திற்கு பாதி தூரம் கடந்த நிலையில் ஒரு வணிக வளாகத்திற்குள் சென்று வண்டி நின்றது. அதிலிருந்து இறங்கி கொண்ட கமிஷனரும், ஜானுக்கு உதவிய அதிகாரியும் பயணித்த தூரத்திற்கு கட்டணத்தை செலுத்திவிட்டு வண்டியை அனுப்பி வைத்தனர். 5 நிமிடங்கள் கழித்து மீண்டும் வேறு ஒரு வண்டியை ஏற்பாடு செய்து அந்த குறிப்பிட்ட இடத்திற்கு புறப்பட்டனர்.
ஜானும் முத்துவும் சென்ற வாகனம் அந்த குறிப்பிட்ட இடத்தை அடைந்தது. வண்டியை அந்த நுழைவுவாயில் முன் நிறுத்திவிட்டு திரும்பிய ஓட்டுநர் “சார் படத்தில் ஏதாவது டாக்சி சீன் வருமானால் அசிஸ்டண்ட் டைரக்டர் கிட்ட சொல்லி கொஞ்சம் என்னையே கூப்பிடுங்க சார், சம்பளம் எல்லாம் வேண்டாம் சொல்லுங்க சார். இதுதான் என் கார்டு” என்று ஓட்டுனருடைய பெயர் தொலைபேசி எண் மற்றும் முகவரி பதிக்கப்பட்ட ஒரு அட்டையை எடுத்து நீட்டினார் ஓட்டுநர். ஒருவேளை இவன் பைத்தியக்காரனக இருப்பான் போல என்று நினைத்த முத்து தயக்கத்துடன் அட்டையை வாங்கிக்கொண்டு ‘’சரி” என்றார். “தேங்க்யூ சார்” என்று கூறிவிட்டு மீண்டும் வாகனத்தை மெதுவாக நுழைவு வாயிலுக்குள் இயக்கத் தொடங்கினார் ஓட்டுநர். அந்த நுழைவு வாயிலில் இருந்த செக்யூரிட்டி ”யாருப்பா” என்று வண்டியை நிறுத்தினார். “அண்ணே ஆர்டிஸ்ட் டிராப்” என்று கூறினார் ஓட்டுநர். “ஓகே பா சீக்கிரமா வெளியே வரணும்” என்று கூறி வண்டியை உள்ளே அனுப்பினார் செக்யூரிட்டி. ஜானிற்கும் முத்துவிற்கும் வழக்கம்போல் ஒன்றுமே விளங்கவில்லை. சிறிது தூரம் பயணித்த வண்டி ஒரு கூட்டத்திற்கு முன்னால் சென்று நின்றது மீண்டும் ஓட்டுனர் முத்துவை பார்த்து ”சார் நான் சொன்னத மறந்திராதீங்க” என்றார். “சரிப்பா” என்று கூறிய முத்து வண்டியின் கதவைத்திறந்து வெளியே வந்ததும் ஆச்சரியத்தில் உறைந்தார். முத்துவிற்கு பின்னால் இறங்கிய ஜானிற்கும் மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
( தொடரும்…)