தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (மாநில நல்லாசிரியர்) பெற்றுள்ள ஆசிரியர் சிகரம் சதீஷ்குமாரை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், மேற்பனைக்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக சிகரம் சதீஷ்குமார் பணிபுரிந்து வருகிறார். இவர் அரசுப்பள்ளியில் பயின்று 12 ம் வகுப்பில் ஒரு பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவர் மட்டுமல்லாமல் பொது நிர்வாகம், சமூகப்பணி, வணிக மேலாண்மை, உளவியல் என வெவ்வேறான துறைகளில் நான்கு முதுகலைப் பட்டங்கள் பெற்றவர் ஆவார்.
இவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது வகுப்பறைக்குப் புதிதாக வர்ணம்தீட்டி, வகுப்பறையின் முகப்பில் கல்வி, அறிவியல், விளையாட்டு, தேச விடுதலைக்குப் பாடுபட்டவர்கள் என ஆளுமைகளின் புகைப்படங்களால் அழகுபடுத்தி இருக்கின்றார்.
மாணவர்களுக்கு இருக்கை வசதி, ஸ்மார்ட் டிவி என தனது சொந்தப் பணம் 82 ஆயிரம் ரூபாயைச் செலவழித்து வகுப்பறைக் கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளார்.
மேலும் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, சுற்றுச்சுவரை புனரமைத்ததுடன், ஜப்பானிலிருந்து நண்பர்கள் உதவியுடன் 75 ஆயிரம் ரூபாய் நன்கொடையாகப் பெற்று பள்ளியின் கழிவறையைப் புனரமைத்துக் கொடுத்து, குடிநீர் இணைப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.
அரசு தொடங்குவதற்கு முன்பே இவர் பணிபுரியும் பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கி ஆசிரியர்களை நியமித்து, அதற்குரிய ஊதியத்தை வெளிநாடுவாழ் நண்பர்களிடமிருந்து பெற்றுக் கொடுத்ததுடன், திருச்சி, கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 6 பள்ளிகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்திக் கொடுத்ததன் மூலம் சுமார் 6 லட்ச ரூபாயை நன்கொடையாகப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவர் ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில் நன்கொடையாளர்கள் மூலம் 30 லட்ச ரூபாய் செலவில் இலவச நீட் பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து அதன் மூலம் பல மருத்துவ மாணவர்களின் கனவை நனவாக்கியுள்ளார்கள். 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பெற காரணமாக இருந்துள்ளார்.
அரசுத் தொடக்கப் பள்ளியில் நன்கொடையாளர் மூலம் 5 கணினிகள் கொண்ட கணினி அறை அமைத்து கொடுத்து அதன் மூலம் ஏழை மாணவர்கள் கணினி வழியில் கல்வி பயில காரணமாக இருந்துள்ளார். இரண்டு கிராமங்களுக்கு 25 சோலார் தெருவிளக்குகளும், 4000 தென்னங்கன்றுகளை நன்கொடையாளர் மூலம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளர்.
100 விவசாயிகளின் விவசாய நிலங்களை தொண்டு நிறுவனத்தின் மூலம் சீரமைத்துக் கொடுத்துள்ளார். இவர் அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு இதுவரை நான்கு நூல்களை எழுதியுள்ளார். 100 க்கும் மேற்பட்ட சிறப்புக் கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.கனவு ஆசிரியர்கள் என்னும் தொடர் கட்டுரையை குமுதம் சிநேகிதி இதழில் இரண்டு ஆண்டுகள் எழுதி உள்ளார்.
பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இவரது கவிதை இடம்பெற்றிருக்கிறது. இவர் சிகரம் தொட்ட ஆசிரியர் விருது விவேகானந்தர் தேடிய கனவு இளைஞர் விருது, சிறந்த சமூகசெயற்பாட்டாளர் விருது, ஒளிரும் நேர்மறைச் சிந்தனையாளர் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
மாணவர் நலன், சமூக நலனில் சிறந்து விளங்கும் ஆசிரியர் சிகரம் சதீஷ்குமாரின் சேவையை பாராட்டி தமிழக அரசு செப்டம்டர் 5 ஆம் தேதி டாகடர் இராதாகிருஷ்ணன் விருது வழங்க உள்ளது. எனவே டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெரும் இளம் ஆசிரியர் சதீஷ்குமாரை உயர் அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூகசேவகர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.