இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகில் கோடிக்கணக்கான சிறப்புகள் நிகழ்ந்துள்ளன, நிகழ்கின்றன, நிகழப்போகின்றன..
அதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி, படித்த பண்டிதனாக இருந்தாலும் சரி, படிக்காத பாமர மனிதனாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் கட்டாயம் கடந்து செல்லும் அறைகள் மூன்று அறைகள் ஆகும்.
- முதல் அறை – ஜனனத்தின் போது தாயின் கருவறை.
- இரண்டாவது அறை – ஒரு மனிதனின் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கும் பள்ளியின் வகுப்பறை.
- மூன்றாவது அறை – மரணத்தின் போது அடக்கமாகும் கல்லறை.
மேற்காணும் மூன்று அறைகளும் ஒரு மனிதன் அவசியம் கடந்து செல்லக்கூடிய அறைகளாகும்.
அரிஸ்டாட்டில் முதல் அப்துல்கலாம் வரை இவ்வுலகில் சாதனை நிகழ்த்திய அனைத்து மனிதர்களுக்கும் வழிகாட்டியாக, குருவாக, ஆசானாக, அச்சாணியாக, அடித்தளமாக அஸ்திவாரமாக, ஏணியாக, கலங்கரை விளக்கமாக இருப்பவர்கள் ஆசிரியர்களே…
டாக்டர் APJ அப்துல் கலாம் ஐயா அவர்கள் தனது சுயசரிதையான அக்னி சிறகுகளில், ‘எனது பள்ளி ஆசிரியர்களே எனது வளர்ச்சிக்கும் காரணம்‘ என்று குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஒரு குழந்தையை முதன் முதலில் இந்த பூமிக்கு கொண்டு வருபவள் தாய். இரண்டாவதாக அந்த குழந்தையை சான்றோன் ஆக்குபவர் தந்தை.
மூன்றாவதாக அந்த குழந்தையை தன் சொல்லாலும், எழுத்தாலும் ஒரு மனிதனாக உருவாக்குபவரே ஆசிரியர். எனவே தான் தெய்வத்திற்கு முன் மூன்றாமிடத்தில் ஆசிரியரை வைத்திருக்கின்றனர் நம் மூதாதையர் .
ஆசிரியருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், இறைவனுக்கு சமமாக அவர்களை வணங்க வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில்
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என ஆத்திச்சூடியில் பாடியிருக்கிறார் ஔவையார். இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன், தன் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தை தாய் தந்தையருடன் செலவிடுவதை விட ஆசிரியருடன் தான் அதிகம் செலவிடுகிறான். ஆதலால் மனிதனின் வாழ்வில் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. மாதா, பிதா, குரு தெய்வம் என்பது சான்றோர் வாக்கு.
ஒரு குழந்தை தனது தாய் தந்தையருக்கு அடுத்து நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, மரியாதை, கல்வி என அனைத்தையும் ஆசிரியரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த ஆசிரியரை பெருமைப்படுத்துவதற்காகவே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தினம் வரலாறு
தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்லாசிரியராக வாழ்ந்து காட்டிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 -ஆம் நாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
ஆசிரியர் தினம் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1962-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். வாழ்க்கை என்ற பாடத்தை கற்பித்து மாணவர்களுக்கு ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.
ஒரு மாணவனை தன்னம்பிக்கை மிகுந்த மனிதன் ஆக்குவது ஆசிரியர்கள்தான். இப்படி மாணவர்களின் வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிப்பதால் தான் ஆசிரியர்கள் என்றும் போற்றப்படுகிறார்கள்.
ஆசிரியர் தின கொண்டாட்டம்
ஆசிரியர் தினமானது நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இதில் பல பேச்சுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி மகிழ்வார்கள்.
மேலும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தமிழக அரசின் “நல்லாசிரியர் விருது” வழங்கப்படுகிறது.
இப்படி மனித வாழ்வில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களைப் போற்றி, நன்றி கூறவே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பின்வருமாறு
வீ.ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் 1888 -ஆம் ஆண்டு, செப்டம்பர் ஐந்தாம் நாள் திருத்தணியில் உள்ள சர்வபள்ளி என்னும் கிராமத்தில் வீராச்சாமிகும், சீதம்மாக்கும் மகனாக பிறந்தார். இவரது தாய் மொழி தெலுங்கு என்ற போதும் தமிழுக்கு முக்கியத்துவம் முன்னுரிமை தந்தார், தமிழனின் பெருமையை இவ்வுலகிற்கு பறை சாற்றிய அவர் ஏப்ரல் 17ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு மறைந்தார்.
மாணவரிடம் இருந்து மாணவர்களுக்காகவே யோசிக்கும் மனம் கொண்டவரே உண்மையான ஆசிரியர் என்றும், புத்தகங்கள் தான் கலாச்சாரங்களுக்கு இடையேயான பாலங்களை உருவாக்கும் வழிமுறை” – என்றும் கூறியவர் சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவரும், இந்தியாவின் இரண்டாது குடியரசு தலைவருமான சர்வப்பள்ளி ராதா கிருஷ்ணன் ஆவார். அந்த புத்தகங்களை புரியவைக்கும் ஆசிரியர்களை நாம் அப்பாலங்களை தாங்கும் தூண்களாக மதிக்க வேண்டும் என்றார்…
கல்வி என்பதும், மருத்துவம் என்பதும் வியாபாரம் ஆகிவிட்ட இன்றைய சூழலில் ஆசிரியருக்கு உரிய மரியாதையை இன்றைய சமூகம் தருவதில்லை என்பதே நடைமுறை உண்மையாகும்…
புடம் போட்டால்தான் தங்கமானது நாம் அணியும் ஆபரணமாக மாறும் என்கிற எதார்த்தத்தை மறந்து விட்டு ஆசிரியரின் கண்டிப்பை எதிர்த்து கேடுகெட்ட இந்த சமூகமானது எண்ணற்ற புகார்கள், வழக்குகளை தொடுத்து ஆசிரியர்களின் கைகளை கட்டி விட்டது… இன்றைய சமூகத்தில் அதிக குற்றங்கள் நிகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆசிரியர்களின் கையில் உள்ள பிரம்பை பிடுங்கி வைத்தது ஒரு காரணமாகும் என்பது நடைமுறை உண்மையாகும்..
ஒரு தேசமானது ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே முடியும் ஒன்று தாய், இரண்டாவது தந்தை, மூன்றாவதாக ஆசிரியர் என்றார் அக்னிச் சிறகை விரித்த அப்துல் கலாம் அய்யா அவர்கள் கலாம் அய்யாவின் கனவை நனவாக்க நாம் ஒன்று சேர்ந்து போராடுவோம்.. ஏற்றி விட்ட ஏணியான ஆசிரியரை போற்றுவோம்…
சமூகப்பற்றாளன் ஞானசித்தன்
செல்: 7598534851