முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில், தற்போது இந்தியாவில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
கடந்த ஜூன் 8ம் தேதி இந்த தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஒன்றிய உயிரி தொழில்நுட்ப துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை தயாரிக்கின்றன. ‘செர்வவாக்’ என்று பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியை, டெல்லியில் நேற்று நடந்த விழாவில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சியில் சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவாலா பேசுகையில், ‘அமெரிக்காவின் பிரபல மருந்து நிறுவனமான நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒமிக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கப்படும். இந்த தடுப்பூசி 6 மாதத்துக்கு பின் அறிமுகப்படுத்தப்படும்,’ என்றார்.