தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முரசொலி எம்.பி. பேசினார்.
நாடாளுமன்றத்தில் தஞ்சை எம்.பி. முரசொலி பேசியதாவது:- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அவருடைய பெயரை சூட்ட வேண்டும். ரெயில்களில் சில வணிக நோக்கத்தோடு, ஏ.சி. பெட்டிகள் அதிகரித்து கொண்டே போகிறது. ஏ.சி. பெட்டிகள் அதிகரிக்கும் காரணத்தினால் சாதாரண மக்கள், நடுத்தர மக்கள் அவர்களுடைய தேவையான பொதுப்பெட்டிகளை மீண்டும் கூடுதலாக இயக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
வந்தே பாரத், தேஜஸ் போன்ற ரெயில்கள் அதிக டிக்கெட் கட்டணம் இருப்பதால் ஏழை, எளிய, சாதாரண மக்கள் பயணம் செய்ய முடியவில்லை. எனவே சாதாரண பயணிகள் பயன்பெறும் வகையில் முன்பதிவு இல்லாத அந்தியோதயா ரெயில்களை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டும். பயணிகளுடைய பாதுகாப்பு கருதி சிறிய ரெயில் நிலையங்களிலும் அனைத்து நடைமேடைகளும் 24 பெட்டிகள் நிற்கும் அளவிற்கு விரிவுபடுத்த வேண்டும். தஞ்சை தொகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தஞ்சை-அரியலூர்-பட்டுக்கோட்டை, மன்னார்குடி-பட்டுக்கோட்டை-தஞ்சை- புதுக்கோட்டை போன்ற வழித்தடங்கள் அமைக்க வேண்டும்.
தஞ்சையில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரிய கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதால் தஞ்சையில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பகல் நேரத்தில் ரெயில் இயக்க வேண்டும். சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு தஞ்சை வழியாகவும், வேளாங்கண்ணி-பெங்களூருவுக்கு தஞ்சை வழியாகவும் ரெயில் இயக்க வேண்டும். சென்னை எழும்பூர்-காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்க வேண்டும். தாம்பரம்-செங்கோட்டை ரெயிலை வாரத்தில் 7 நாட்களும் இயக்க வேண்டும். திருச்சி-பாலக்காடு, திருச்சி-ஹவுரா, திருச்சி-திருவனந்தபுரம் ரெயில்களை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும். 147 ஆண்டுகள் பெருமை வாய்ந்த தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.