நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கோவை மாவட்டத்தை சேர்ந்த, ஏழு ஊராட்சி தலைவர்களின் காசோலை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 228 ஊராட்சிகள் உள்ளன. நிதி கையாளும் அதிகாரம், அந்தந்த ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், முறைகேடு செய்வதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. ஆய்வில், சில ஊராட்சிகளில் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.கடந்த, 2020-&21ல் பிளீச்சிங் பவுடர் வாங்கியது; கட்டட வரைபட பதிவேட்டின் படி, ஊராட்சி மன்றம் அங்கீகாரம் பெறாமல், 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு அனுமதி வழங்கியது உள்ளிட்டவற்றில் முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சோமையம்பாளையம் ஊராட்சி ரங்கராஜ், அசோகபுரம் ஊராட்சி ரமேஷ், காரமடை ஒன்றியம் மருதூர் ஊராட்சி பூர்ணிமா, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி விமலா, அன்னூர் ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சி கீதா, மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி பழனியம்மாள், ஆனைமலை ஒன்றியம் தென்சித்தூர் ஊராட்சி செல்வவிநாயகம் ஆகிய ஏழு ஊராட்சி தலைவர்கள் மீது பல்வேறு புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது.
தொடர்ந்து, ஊராட்சி தலைவர்கள் காசோலை பயன்படுத்தும் அதிகாரத்தை கோவை கலெக்டர் சமீரன், தற்காலிகமாக ரத்து செய்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வழங்கியுள்ளார்.