கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களின் விநியோகம் நடைபெறுவதாக புகார் எழுந்தது. போதை பழக்கம் அதிகரித்துள்ளதால் குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் பெருத்துவிட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களால் இளைய சமுதாயம் சீரழிந்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.
பள்ளி, கல்லூரிகளிலும் கஞ்சா விற்பனை கும்பல் விற்பனையில் ஈடுபட்டு மாணவர்களை கெடுத்து வருவதால் தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
கஞ்சா உள்ளிட்ட பொருட்களை ஒழிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினும் காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போதை பொருட்களை ஒழிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவை அழிக்கப்பட்டது. கஞ்சா வியாபாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.ஓ என்ற சோதனை கடந்த மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவிலும் கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் கஞ்சா வியாபாரிகளுக்கு சொந்தமான 2000 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. அதில் இருந்த ரூ 50 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டன. இது தொடர்பாக கடிதங்கள் வங்கிகளுக்கு காவல் துறை சார்பில் எழுதப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு பிறப்பித்திருந்தார். ஏற்கெனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க எஸ் பி உத்தரவிட்டதன் பேரில் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.