தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட புதிதாக உருவாக்கப்பட்ட 152 பணியிடங்களில் பணியாற்றுவதற்காக இந்த பணியிட மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்கள் உமா, சசிகலா, அமுதவல்லி ஆகியோரும் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல், துறையில் பல்வேறு மாற்றங்களும், அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இடம் மாறுதல்கள் அனைத்தும் கவுன்சிலிங் மூலம் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சீரமைப்பு நடவடிக்கையாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்றவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, ஊழியர்கள் இடமாறுதல் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உமா, சசிகலா, அமுதவல்லி ஆகிய 3 இணை இயக்குநர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 இணை இயக்குநர்களும் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளிக்கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் என 152 டி.இ.ஓ பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில், அவைகளில் பணியாற்றும் வகையில் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும், புதிய பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் பள்ளிகள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்க தலா1 மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மொத்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் எண்ணிக்கை 120-ல் இருந்து 152 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, புதிதாக 15 வட்டாரக் கல்வி அலுவலர், 16 தனி உதவியாளர், 86 கண்காணிப்பாளர் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட டி.இ.ஓ பணியிடங்களை நிரப்புவதற்காகவே, உடனடியாக ஏற்கனவே டி.இ.ஓக்களாக இருப்பவர்களை இடமாற்றம் செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.