பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை. இது எந்த ஒரு உண்மை சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டது அல்ல ஆகவே நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இக்கதையின் மூலம் ஏற்படும் மன உளைச்சலுக்கோ, குழப்பங்களுகோ நிர்வாகமும் ஆசிரியரும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
வண்டியை விட்டு இறங்கி நின்ற ஜான் மற்றும் முத்து ஆகிய இருவருக்கும் முன்னால் நின்றுகொண்டிருந்த கூட்டத்தில் சுமார் 200 பேர் இவர்களைப் போலவே காக்கி உடையில் நின்றுகொண்டிருந்தனர். ஒளி விளக்குகளும் கேமராக்களும் ஆங்காங்கே பொருத்தப்பட்டு படப்பிடிப்பு தளம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்த இடம் வாடகை வாகன ஓட்டுனருக்கு முன்கூட்டியே பரிச்சயமான, நன்கு பழக்கப்பட்ட இடமாகும். அங்கு கூடி இருப்பவர்களை போலவே தங்களையும் நடிகர்கள் என்று வாகன ஓட்டுனர் நினைத்ததால் தான் வரும் வழியில் அத்தகைய கேள்விகளை கேட்டார் என்று முத்துவுக்கு புரிந்தது.
“எனக்கு ஒண்ணுமே புடிபடலை முத்து உங்களுக்கு எதுவும் புரியுதா?” என்று முத்துவை பார்த்து கேட்டார் ஜான். “எனக்கும் ஒன்னும் பிடிபடவில்லை ஜான் சார். விசாரிக்கலாமா என்று தெரியவில்லையே சரி வாங்க உள்ளே போவோம். வண்டிக்கு எவ்வளவு கேளுங்க!” என்று கூறினார் முத்து.
“எவ்வளவு ஆச்சு” என்று ஜான் ஓட்டுனரிடம் கேட்டார். ”420 சார் 400 ரூபாய் கொடுங்க. நான் கொடுத்த கார்டுல என்னோட போன் நம்பர் இருக்கு, சூட் முடிஞ்சதும் போன் போட்டீங்கன்னா நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் சார் என்றார்”. “சரிப்பா கண்டிப்பா கூப்பிடுறேன்” என்று கூறிவிட்டு ரூபாய் 400 எடுத்து கொடுத்துவிட்டு திரும்பும்போது கமிஷனர் வந்த வாகனமும் அங்கு வந்து நின்றது. வண்டியிலிருந்து இறங்கிய கமிஷனர் இவர்கள் இருவரும் யார் என்பதே தெரியாததுபோல் பார்த்தும் பார்க்காத மாதிரி அந்தக் கூட்டத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார் இருவரும் செய்வதறியாது கமிஷனர் பின் நடக்க தொடர்ந்தனர்.
“சார், சார் ஒரு நிமிஷம்” என்று கூறிக்கொண்டே ஓட்டுநர் கதவைத்திறந்து வெளியே வந்தார். கமிஷனர் பின் நடக்கத் தொடங்கிய ஜானும் முத்துவும் ஒரு நொடி நின்று ஓட்டுனரை பார்த்து திரும்பினார். “பில் வாங்காமல் போறீங்க சார், இது இல்லன்னா அப்புறம் உங்களுக்கு காசு தர மாட்டாங்க” என்று கூறிவிட்டு பயண கட்டண ரசீதை ஜானிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றார் ஓட்டுனர்.
இவர்கள் இருவரும் ஓட்டுநரை பார்க்க திரும்பிய நேரத்தில் கமிஷனர் காக்கிகளின் கூட்டத்திற்குள் சென்று மாயமானார். ஜானும், முத்துவும் மீண்டும் செய்வதறியாது ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர். சட்டென்று, முன்பு ஒலித்தது போல் மீண்டும் இருவரின் கைபேயும் ஒரே நேரத்தில் சினுங்கியது. சற்றும் தாமதிக்காமல் இருவரும் ஒரே நேரத்தில் எடுத்து பார்த்தனர். அதில் ஆறாவது மாடி, மூன்றாவது கட்டிடம், பதினைந்து நிமிடங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒருவழியாக எங்கு செல்லவேண்டும் என்று தெரிந்ததால் ஜானும், முத்துவும் நொடியும் தாமதிக்காமல் மூன்றாவது கட்டிடத்தை நோக்கி நடக்க தொடங்கினர்.
சரியாக ஒன்பதாவது நிமிடத்தில் ஆறாவது மாடியை அடைந்தனர். ஆனால் அங்கு யாருமே இல்லை. கட்டிடம் வெறிச்சோடி கிடந்தது. ஜான் முத்துவை பார்த்து “என்ன நடக்குது!?, நாம் சரியான இடத்தில் தான் இருக்கோமா? கொஞ்சம் அந்த மெசேஜை மீண்டும் செக் பண்ணுங்க” என்று கூறிவிட்டு கண்களை மூடி மூச்சை இழுத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். மீண்டும், வந்த செய்தியை ஒரு முறை சரி பார்த்துக் கொண்ட முத்து, இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சரியான இடத்தில் தான் நாம் இருக்கிறோம் என்றார்.
குழப்பத்தில் இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தபோது அவர்களை அறியாமலே மூன்று நிமிடம் கடந்து சென்றது. சரியாக 13 ஆவது நிமிடத்தில் சுமார் இருபது பேர் இவர்களை போலவே குழப்பத்துடன் அங்கு வந்து சேர்ந்தனர். சரியாக பதினைந்தாவது நிமிடத்தில் கமிஷனருடன் ஏழு பேர் சில பைகளுடன் அந்த தளத்தை அடைந்தனர். கமிஷனரை பார்த்தவுடன் முத்து, ஜான் மற்றும் 20 பேர் சொல்லி வைத்தாற்போல் ஒரே நேரத்தில் சல்யூட் அடித்தனர்.
ஒரு நொடி முத்துவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் காவலர் பயிற்சிப் பள்ளியில் இருந்தபோது இதேபோல் ஒன்றாக சல்யூட் அடித்தது ஞாபகம் வந்தது. காவலர்கள் சல்யூட் அடித்து மரியாதை வழங்கியது ஏற்றுக் கொள்ளும் விதமாக கமிஷனரும் அவர்களைப் பார்த்து சல்யூட் அடித்தார். நொடி தாமதிக்காமல் பேச தொடங்கிய கமிஷனர், “எல்லாருக்கும் வணக்கம், ஏன் எதுக்குன்னு உங்க அனைவருக்கும் நூறு கேள்விகள் இருக்கும். எல்லாத்துக்கும் இப்ப பதில் சொல்ல நேரமில்லை உங்கள் சில பேருக்கு ஒருவரை ஒருவர் தெரிந்து இருக்கலாம் ஆனால் அது இந்த நொடி முடிவடைகிறது. இப்போதிலிருந்து உங்களில் ஒருவரை ஒருவர் யாருக்குமே தெரியாது. இனி உங்க எல்லாருக்கும் தெரிந்தது ஏழு பேர் மட்டும் தான் இதோ என் பின்னே நிற்கிறார்கள். 1.மிஸ் ஒயிட், 2. மேடம் கிரீன், 3.மிஸ்சஸ் ரெட், 4.செல்வி ப்ளூ, 5.மிஸ்டர் ஆரஞ்சு, 6.மிஸ்டர் பிளாக், 7. மிஸ்டர் எல்லோ. நீங்கள் மொத்தம் 22 பேர், வாரத்தில் ஏழு நாள் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியது உங்கள் கடமை. இப்போதிலிருந்து இவர்கள்தான் உங்களுடைய மேலதிகாரிகள். இந்த நொடி முதல் உங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. காவலர் சீருடை அணிந்து எப்போதும் வெளியே செல்லக்கூடாது. எந்த ஒரு அதிகாரிக்கும் நீங்கள் இனிமேல் சல்யூட் அடிக்க கூடாது அது எத்தனை பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி, நானாக இருந்தாலும் டி.ஜி.பியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் நீங்கள் பொதுவெளியில் சல்யூட் அடிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இந்த நொடி முதல் நீங்கள் அனைவரும் சிறப்பு அந்தஸ்து பெறுகிறீர்கள். இன்று முதல் நீங்கள் என்ன வேலை செய்ய வேண்டும், எப்போது வேலை செய்ய வேண்டும், எங்கு வேலை செய்ய வேண்டும் போன்ற அனைத்து தகவல்களும் இந்த ஏழு பேர் மூலம் உங்களுக்கு தெரியவரும். இங்கிருக்கும் பைகளில் உங்களுக்காக ஒரு கைப்பேசியும், ஒரு கைக்கடிகாரம் மற்றும் ஒரு புத்தகம் உள்ளது. இதை வாங்கிக்கொண்டு நீங்கள் அனைவரும் வீட்டிற்கு செல்லலாம். ஏன்?, என்ற கேள்விக்கு உங்கள் அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு உங்களுக்கு பதில் கிடைக்கும்” என்று கூறிவிட்டு உடனடியாக கமிஷனர் புறப்பட்டார். முத்துவிற்கு இங்கு நடக்கும் அனைத்தும் கனவா! அல்லது நினைவா! என்று அதிர்ச்சி ஏற்பட்டு உரைந்து அங்கு நின்ற அனைவரையும் பித்துப் பிடித்தாற் போல் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.
( தொடரும்…)