இந்தியாவில் நடைபெறும் தசரா திருவிழாவில் மைசூருக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு அம்மன் பல்வேறு கோளத்தில் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் தனி சிறப்பு, முத்தாரம்மனுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் வேடங்கள் அணிந்து ஆடிப்பாடி காணிக்கை வசூல் செய்து, அதனை அம்மனுக்கு செலுத்தினால் நினைத்த காரியம் நடக்கும் என்பதுதான்.
இதையொட்டி இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் வேடம் அணிந்து விரதம் இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் தசரா திருவிழா கொண்டாட அனுமதிக்காத நிலையில் இந்த ஆண்டு கொரானா விதிமுறைகள் தளர்த்தப்பட்டதையடுத்து வழக்கத்தை விட கூடுதல் உற்சாகமாக பக்தர்கள் தசரா திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி கருங்காளி, சுடுகாட்டு காளி, சடகாளி, ஊதாகாளி, அட்டகாளி, செங்காளி, வீரகாளி என பல்வேறு காளியம்மனின் வேடங்கள் உள்ளிட்ட கடவுளின் வேடங்கள் மற்றும் பெண்கள், மிருகங்களின் வேடங்கள் அணிந்த பக்தர்கள் குலசேகரப்பட்டிணம் சுற்றுவட்டார பகுதிகளான ஆத்தூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆடிப்பாடி காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
இதில் காளியின் ஆட்டம் காண்போரை கதி கலங்க செய்கிறது. இந்த பக்தர்களின் ஆட்டம் பாட்டத்துடன் சென்னை நடன கலைஞர்களின் குத்தாட்டமும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
– கணேசபாண்டி, இணைஆசிரியர்