யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்விற்கு இலவசமாக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக தலைமை செயலாளரும், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் தலைவருமான இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு: சென்னையில் உள்ள அகில இந்தியக் குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு 28.5.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்க உள்ளது.
சென்னை அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, உணவு, தரமான நூலகம், காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது. இப்பயிற்சி மையம் 225 முழுநேர தேர்வர்களையும், 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதேபோன்று, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன. 2023ம் ஆண்டில் மத்தியக் தேர்வாணையக்குழு (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக வருகிற 7ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடைய நபர்கள் அடுத்த மாதம் 13ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு, தேர்வு செய்யப்படும் மாணவ-மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். டிசம்பர் 2வது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.