தஞ்சாவூரில் நடைபெற்ற மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037-வது சதய விழாவை முன்னிட்டு பெரியகோயில் முன்பு உள்ள ராஜராஜன் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் பெரியகோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தில் ராஜராஜ சோழன் சதய விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம், அதன்படி, நிகழாண்டு சதய விழா பல்வேறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
பின்னர், தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோயில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார். தொடர்ந்து, ராஜராஜசோழன் மீட்டெடுத்த, திருமுறை நூல்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, யானை மீது வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவ பூத இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு, கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 48 ஓதுவார்கள், தேவாரப் பாடல்களை பாடியபடி வந்தனர். அங்கு, மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி. ரவளிப்பிரியா, சதய விழா குழுத் தலைவர் து.செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தோர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து, பெரிய கோயிலில் உள்ள ராஜராஜசோழன், உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். அப்போது, ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகளுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர்உள்ளிட்ட 48 மங்களப் பொருட்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.