எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், ரூ.373 கோடியே 22 லட்சம் செலவில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், ரூ.373 கோடியே 22 லட்சம் செலவில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்களையும், ரூ.91 கோடியே 57 லட்சம் செலவில் 57 துணை மின் நிலையங்களில், 723 எம்.வி.ஏ அளவிற்கு உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.130 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 8 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் தொழிற்துறை, விவசாயம், நகர்புற மற்றும் ஊரக மேம்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஏற்றவாறு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க செய்யும் உயரிய நோக்குடன், தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைத்தல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களின் திறனை மேம்படுத்தும் விதமாக கூடுதல் மின் மாற்றிகள் அமைத்தல், சரியான மின் அழுத்தத்துடன் கூடிய சீரான மின்சாரம் வழங்குதல் போன்ற பணிகளை, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் – ஈரோட்டில் ரூ.80 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230 கி.வோ தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்; திருவள்ளூர் மாவட்டம் – பாப்பரம்பாக்கம் சிட்கோ செம்பரம்பாக்கம் மற்றும் வேலூர் மாவட்டம் – மேல்பாடி ஆகிய இடங்களில் ரூ.46 கோடியே 71 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள்; செங்கல்பட்டு மாவட்டம் – அனகாபுத்தூர்; சென்னை மாவட்டம் – மில்லர்ஸ் சாலை, கண்ணம்மா பேட்டை (எம்.ஆர்.சாலை), கார்ப்பரேஷன் காலனி, வடபழனி, தாமோதரன் தெரு, கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ.219 கோடியே 29 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஏழு 33 கி.வோ துணை மின் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் – விளாகம்;
திருவள்ளுர் மாவட்டம் – பொன்னியம்மன் நகர் மற்றும் வேலூர் மாவட்டம் – மடையப்பட்டு ஆகிய இடங்களில் ரூ.26 கோடியே 96 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 33 கி.வோ துணை மின் நிலையங்கள்; என மொத்தம் ரூ.373 கோடியே 22 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
