தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது என அதன் மேயர் சண். ராமநாதன் மாமன்ற கூட்டத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம், மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மேயர் சண்.ராமநாதன், தமிழகத்திலுள்ள 20 மாநகராட்சிகளில் முதன்முதலாக தஞ்சாவூர் மாநகராட்சிதான் கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சிசெய்த அ.தி.மு.க கடும் நிதிச்சுமையை வைத்திருந்தது. நான் மேயராகப் பொறுப்பேற்ற பிறகு புதிதாகக் கட்டப்பட்ட வணிக வளாகங்கள் பொது ஏல முறையில் வெளிப்படையாக டெண்டர்விடப்பட்டதன் மூலம் வருமானம் கிடைத்தது.
அந்த நிதியில் உலக வங்கியிலிருந்த ரூ.5 கோடிக் கடன் மற்றும் சிறு சிறு கடன்கள் என அனைத்துக் கடன்களையும் அடைத்திருக்கிறோம். இதன் மூலம் தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்திருக்கிறது. கடன் இல்லாததால் இனி வரும் வருவாய் புதிய திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக இதை உருவாக்க வேண்டும். அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்” என தெரிவித்தார்.