மின் கட்டணம் கட்ட சொல்லி அரங்கேறும் நூதன மோசடி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமீப காலமாக ‘சைபர் கிரைம்’ குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும். சென்ற மாத பில் கட்டணம் ‘அப்டேட்’ செய்யப்படவில்லை. உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு செல்போன் எண்ணையும் சேர்த்து குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்புவார்கள்.
இதனை உண்மை என்று எண்ணி தொடர்புகொள்ளும் பொதுமக்களிடம் அவர்கள் செல்போனில் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன்களான Quick Support அல்லது Any Desk போன்ற செயலிகளை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய சொல்லுவார்கள். அதன் மூலம் எதிர்முனையில் இருக்கும் பொதுமக்களின் செல்போனில் உள்ள விவரங்களை ‘சைபர்’ குற்றவாளிகள் எளிதாக பார்க்க முடியும். பின்னர் ரூ.10-க்கு குறைந்த அளவில் ‘ரீசார்ஜ்’ செய்ய சொல்லுவார்கள். அப்போது பொதுமக்கள் உள்ளிடும் வங்கி தொடர்பான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தங்களுக்கு தேவையான வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பிவிடுவார்கள்.
இந்த செயலிகள் மூலம் பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. எண்களையும் குற்றவாளிகளால் எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பார்கள்.
எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்திலிருந்து இதுபோன்ற குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.