வானம் உன் கையில், சொற்களால் என்னை அடிக்காதே, உனக்குத்தான் என் இதயம், காலத்தை வென்றவர்கள் போன்ற நான்கு புத்தகங்களை இதுவரை எழுதியுள்ளேன்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், வாசிப்பு நேசிப்பு சுவாசிப்பு போன்ற தலைப்பில் தொடரானது சென்ற ஆண்டு வெளிவந்து தற்பொழுது அவை புத்தகமாக வெளிவர இருக்கிறது…
சமூக மேன்மை, ஊருக்காக உழைத்தல் போன்ற உயரிய சிந்தனைகளை உன்னத கொள்கைகளை தனது இரு கண்களாக கொண்டு செயல்பட்டு கொண்டு வருபவர் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழின் ஆசிரியர் திரு.சிவகுமார் ஆவார்…
அலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு இந்த ஆண்டுக்கான புதிய தொடரை துவங்கலாம் என்று அவர் என்னிடம் வேண்டுகோள் வைத்தார்..
அந்த வகையில் எம்ஜிஆர்தாசன் என்கிற புனைப்பெயரில் வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர்.. என்கின்ற தலைப்பில் புதிய தொடரானது ஒவ்வொரு மாதமும் எழுத உள்ளேன்…
எம்ஜிஆர் எனக்கு அதிகம் பிடிக்கும் ஏனென்றால் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்காமல் அளவுக்கு அதிகமாக புகழை சேர்த்த மாமனிதன் என்பதால்.
எம்ஜிஆரை பற்றி எழுதினால் நாள் போதாது, வாரம் போதாது, மாதம் போதாது, ஏன் ஆண்டுகள் கூட போதாது சகாப்தத்தை, சரித்திரத்தை பற்றி கூறிக் கொண்டே போனால் அது அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகும்….
வெறும் மூன்றாவது வரை மட்டுமே படித்து தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராவது என்பது யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத மிகப்பெரிய சாதனை…மேலும் பாரத ரத்னா’ விருது பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்.ஜி.ஆர் ஆவார்…
இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக நம் தமிழகம் தொடர்ந்து திகழ்கிறது என்றால், அதற்கு இதுவரை இந்த மாநிலத்தை ஆட்சி புரிந்த தலைசிறந்த முதல்வர்களின் நிர்வாகத் திறமையே காரணம். அதிலும் குறிப்பாக, எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி சாதனைகளும் முக்கிய காரணம் ஆகும்.
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்?
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்?
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்?
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்?
கவிஞர் வாலி அவர்களின் தீர்க்கதரிசனமான வரிகள் காலத்தால் அழிக்க முடியாத காவியம் ஆகிவிட்டன..
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையுள்
தெய்வம் போல வைக்கப்படும் என்கின்ற அய்யன் திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பல்வேறு இடங்களில் கோயில் கட்டி கடவுளாக மக்கள் வணங்கி வருகிறார்கள்….
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
அதிகாரம்: அன்புடைமை
குறள் எண்: 71
அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
மேற்காணும் திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக எம்ஜிஆர் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை நான் உங்களுக்கு தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்…
அந்த உண்மை சம்பவமானது பின்வருமாறு….
“உலகம் சுற்றும் வாலிபன்” படத்தின் படப்பிடிப்பிற்காக விழுப்புரம் அருகே ஒரு பிரமாண்ட செட் போடப்பட்டு இருந்தது. இதை பார்வையிட நடிகரும் அந்த படத்தின் இயக்குனருமான எம்.ஜி.ஆர் தனது நீல நிற அம்பாசிடர் காரில் சென்று கொண்டு இருந்தார்.போகும் வழியில் காரிலேயே நன்றாக தூங்கிவிட விழுப்புரத்திற்கு 25 கிலோ மீட்டர் முன்பு வண்டியின் டயர் பஞ்சராகி விடுகிறது.
அப்போது கண் விழித்த எம்.ஜி.ஆர் தனது உதவியாளரிடம் தனக்கு மிகவும் பசிப்பதாகவும் அருகில் உணவகம் இருந்தால் ஏதாவது சாப்பிட வாங்கி வரும் படி கூறுகிறார். உதவியாளர் சிறிது தூரம் நடந்து சென்று பார்க்கையில் அங்கு ஒரு கடை இருந்தது. அங்கிருந்த பாட்டி பனங்கிழங்கு, வேர்க்கடலை, சீனிமுட்டாய் ஆகியவற்றை விற்று கொண்டிருந்தார்.அங்கு சென்ற உதவியாளர் எல்லா பண்டங்களிலும் ஒரு படி வாங்கி கொண்டு கடைசியாக 50 பைசா மதிப்புள்ள பொருட்களுக்கு 10 ரூபாய் கொடுத்தார். பாட்டி மீதி சிலரை கொடுக்க முட்பட “பரவாயில்ல பாட்டி நீங்களே வைச்சுக்குங்க” என்று கூறி விட்டு உதவியாளர் வந்து விடுகிறார்.
அந்த பண்டங்களின் சுவை எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்து விட்டது.அதன் பிறகு அவர் படப்பிடிப்பிற்கு தளத்திற்கு போய் அன்றைய வேலையை கவனித்தார். மறுநாள் எம்.ஜி.ஆர் வெகு சீக்கிரமாகவே படப்பிடிப்பிற்கு கிளம்பி அதே பழைய இடத்தில வண்டியை நிறுத்தி உதவியாளரிடம் “போய் பனங்கிழங்கும் வேர்க்கடலையும் வாங்கிட்டு வாங்க “என்று கூறுகிறார். இது பல நாட்களாக தொடர்கிறது.
உதவியாளரும் வாங்கி வரும் போதெல்லாம் பாட்டிக்கு 10 அல்லது 20 அல்லது 50 ரூபாயை கொடுக்கிறார் ஆனால் அந்த பண்டங்களின் மதிப்பு 50 பைசா மட்டுமே ஒரு நாள் இதே போல் உதவியாளர் அங்கு போகும் போது கடையில் பாட்டி இல்லை உடல்நிலை சரி இல்லாமல் வீட்டுக்குள் படுத்திருக்கிறார்.
இந்த செய்தியை எம்.ஜி.ஆரிடம் உதவியாளர் கூற”உடனே போய் அந்த பாட்டிக்கு என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு வாங்க” என்று சொல்லி அனுப்புகிறார்.பாட்டியின் வீட்டுக்கு சென்ற உதவியாளர் பாட்டியை பார்த்து நலம் விசாரித்து “உணவு செய்ய முடியுமா” என்று கேட்க
பாட்டி : யாருக்கு தம்பி வாங்கிட்டு போறீங்க
உதவியாளர் : அது வேற யாரும் இல்ல பாட்டி நம்ம எம்.ஜி.ஆர் தான்.
பாட்டி : ஐயோ அந்த தங்கமா அந்த மகராசன நான் பார்க்கணும்.
என்று கூறி கார் இருக்கும் இடத்திற்கு வருகிறார். அப்போது எம்.ஜி.ஆர் அவருக்கு 500 ரூபாயை கொடுக்க.
பாட்டி : அய்யா உன் முகத்தை பார்த்ததே போதும். உன்ன கட்டிபுடுச்சு ஒரு முத்தம் தரட்டுமா? என்று கேட்க
எம்.ஜி.ஆர் உடனே காரில் இருந்து இறங்கி பாட்டியை அணைத்து ஆரத்தழுவி பாசத்தோடு முத்தமிட பாட்டி உருகி போய் கண்கலங்கி விடுகிறார்.
இந்த நிகழ்வுக்கு பின் படிப்பிடிப்பு முடிகிறது. படம் வெளியீட்டிற்கு தயார் ஆனாலும் திரை அரங்கு கிடைக்காத காரணத்தால் பட வெளியீடு தாமதமாகிறது.எனவே வேறு படங்களில் எம்.ஜி.ஆர் நடிக்க தொடங்குகிறார்.
சில மாதங்கள் கழித்து ஒரு தேநீர் கடையில் பாட்டி ஒருவருடன் இதை பற்றி கேட்கிறார்.
“எம்.ஜி.ஆர் நடித்த அந்த படம் ஏன் இன்னும் வரல” என்று பாட்டி அங்கிருந்தவரை கேக்க
“பண தட்டுப்பட்டால் எம்.ஜி.ஆரால் அந்த படத்தை வெளியிட முடியவில்லை” என்று அங்கிருந்தவர் கூறுகிறார். இதனை கேட்ட பாட்டி சில நாட்களில் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் வீட்டுக்கு சந்திக்க போகிறார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் உணவருந்தி கொண்டிருக்க உதவியாளர் விழுப்புரம் கடை பாட்டி வந்திருப்பதை பற்றி கூறியவுடன் கையை கூட கழுவாமல் துண்டை எடுத்து உடம்பை போர்த்தி கொண்டு உடனே வெளியே வந்து பாட்டியை பார்த்து அணைத்து கொண்டு கேட்கிறார்.
எம்.ஜி.ஆர் : என்னமா என்ன விஷயம்.சொல்லுங்க உங்களுக்கு நான் என்ன செய்யணும் என்று கேட்க.
பாட்டி : எனக்கு ஒன்னும் வேணாம்பா.உன்கிட்ட கொஞ்சம் பேசணும்
எம்.ஜி.ஆர் : சொல்லுங்கம்மா நான் என்ன செய்யணும்
தனது சுருக்கு பையில் இருந்து 1800 ரூபாயை எடுத்து பாட்டி எம்.ஜி.ஆரிடம் கொடுத்து “படம் நின்னு போச்சாம். பண கஷ்டத்துல இருக்கியாம். அந்த படம் தியேட்டர்ல வரணும் கண்ணு. செய்யி தங்கம்”என்று கூற கண்கலங்கி விட்டாராம் எம்.ஜி.ஆர்.
“அதெல்லாம் பட விநியோகஸ்தர்களிடம் பேசி சரி பண்ணிட்டேன்மா.. அடுத்த வாரம் படம் வந்துடும்” என்று கூறி பாட்டியை அனுப்பி வைத்தார்.
மேற்காணும் நிகழ்வை நாம் வாசிக்கும் போது ஒருவேளை என்னை போல உங்களுக்கும் கண் கலங்கினால் நீங்கள் எம்.ஜி.ஆரின் மனம் எப்படி பட்டது என்பதை நீங்கள் நன்கு உணர்ந்து இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்…
(வழி தொடரும்…)
எம்ஜிஆர் தாசன்