பொறுப்பு துறப்பு
இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை. இது எந்த ஒரு உண்மை சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டது அல்ல ஆகவே நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இக்கதையின் மூலம் ஏற்படும் மன உளைச்சலுக்கோ, குழப்பங்களுகோ நிர்வாகமும் ஆசிரியரும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கமிஷனர் கிளம்பிய சில நிமிடங்களில் அங்கிருந்து அனைவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பி சென்றனர். பரபரப்பான நாளில் பாதி கடந்திருக்கும் நிலையில் தனது வீட்டிற்கு அருகே வந்தவுடன் தான் காலையில் வீட்டில் என்ன நடந்தது என்று நினைவு கூர்ந்தார் ஜான். உடனே தனது செல்போனை எடுத்து காலையில் தனது வீட்டிற்கு வந்து சென்ற டாக்டருக்கு போன் செய்தார் ஆனால் டாக்டர் போன் எடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருக்கும்போது வீடு வந்து சேர்ந்தது அவர் வந்த வாகனம். வாகனத்தை விட்டு இறங்கிய ஜான் “நன்றிப்பா” என்று ஓட்டுனரை பார்த்த கூறிவிட்டு அவருக்கு உண்டான தொகையை கொடுத்து விட்டு திரும்பும்போது வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்த கிறிஸ்டினா, எப்பொழுதும் இல்லாத நேரத்தில் ஜான் வந்திருப்பதால் குழப்பத்துடன் கதவை திறந்து கொண்டிருந்தார்.
மனைவியை பார்த்தவுடன் “ஹவ் ஸ் சூசி” என்று அசதியாக கேட்டார். முன்பு எப்போதும் இதுவரை வேலை முடித்து வரும்போது தன் கணவரை அசதியாக பார்த்திராத கிறிஸ்டினா, “காலையில் டாக்டர் வந்து போனபிறகு நல்லாதான் இருக்கு உங்களுக்கு என்ன ஆச்சு? இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டீங்க! அதுவும் ரொம்ப டயர்டா இருக்கீங்க ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டார். ” அதெல்லாம் ஒன்னும் இல்ல டீனா உள்ள வா சொல்றேன்” என்று தனது காலணிகளை கழட்டி வெளியே வைத்துவிட்டு வீட்டிற்கு உள்ளே சென்ற ஜான் தான் கொண்டுவந்த உடமைகளை மேசை மேல் வைத்து விட்டு “சூசி எங்க” என்று தனது செல்லப்பிராணியை தேடிச் சென்றார். கொண்டுவந்திருந்த உடமைகளில் புதிதாக போன் இருந்ததைப் பார்த்து “இப்ப எதுக்கு சார் புதுசா போன் வாங்கினீங்க” என்றார் கிறிஸ்டினா. கிறிஸ்டினா கேட்டது காதில் விழுந்தும் விழாத மாதிரி தனது மகளின் நினைவாக மீதமிருக்கும் ஒரே உடைமையான அந்த செல்லப்பிராணியை தனது அருகே அமர வைத்து தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஜான். “நான் போன் பண்ணா எடுக்கல டாக்டர் என்ன சொன்னாரு டீனா” என்று கேட்டுக் கொண்டு இருக்கும்போதே ஜானின் அருகில் வந்து அமர்ந்த கிறிஸ்டினா எதுவும் பேசாமல் ஜானையே பார்த்துக் கொண்டிருந்தார். தனது மனைவியின் பார்வையில் இருக்கும் மாற்றத்தைப் புரிந்து கொண்ட ஜான் “டீனா, ரிலாக்ஸ் எந்த பிரச்சனையும் இல்லை நான்தான் சொல்றேன் இல்ல நாம இத பத்தி அப்புறமா பேசலாம், ஃபர்ஸ்ட் டாக்டர் என்ன சொன்னாரு சொல்லு” என்றார். “டாக்டர் என்ன சொன்னார் நீங்கள் சொன்னதுதான் அவரும் சொன்னார். எந்த பிரச்சனையும் இல்லை ரிலாக்ஸ்” என்று கிறிஸ்டினா சொல்லவும் ஜானிற்கு சிரிப்பு வந்தது. ஏதாவது பிரச்சனையாக இருந்தால் ஜான் சிரித்து இருக்கமாட்டார் என்று புரிந்து கொண்ட கிறிஸ்டினா மன நிம்மதியுடன் ஜானின் சிரிப்பை புன்னகையுடன் ரசித்தார்.
தனது மகளின் இறப்பிற்குப் பிறகு ஜான் சிரிப்பதை மறந்திருந்தார். இவ்வாறு கவலை மறந்து சிரிப்பது கிறிஸ்டினாவிற்கு சந்தோஷத்தையும் இன்று என்ன நடந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தனது கையில் இருந்த மருந்து சீட்டை ஜானிடம் நீட்டி “இதை வாங்கி கொடுக்க சொன்னார், காலையில் ஊசி போட்டார் அப்புறம் கொஞ்ச நேரத்திலேயே சூசி விளையாட ஆரம்பிச்சிருச்சு” என்றார் கிறிஸ்டினா. ”தேங்க் காட், நீ போன் பண்ணவும் எனக்கு ஒண்ணுமே புரியல டீனா. நல்ல வேலையா நான் அந்த நேரம் பார்த்து வண்டி ஓட்டிக்கிட்டு இல்லை அதனாலதான் உடனே போன் எடுத்தேன் ஒருவேளை நான் ட்ரைவிங்கில் இருந்திருந்தால் என்ன பண்றது” என்றார் ஜான். “ஐ அம் சாரி ஜான் நேத்து நீங்க டாக்டர் நம்பர் எடுத்துக்க சொன்னீங்க ஆனால் நான் அப்புறம் எடுத்துக்கலாம் என்று அசால்டாக இருந்துவிட்டேன். அப்புறம் மறந்துட்டேன். அப்படியே எனக்கு டாக்டர் நம்பர் மெசேஜ் பண்ணிருங்க ஜான் இனிமேல் வேலை டைம்ல உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டி இருக்காது” என்றார் கிறிஸ்டினா.
“அதான் நம்பர் கையிலே வச்சிருக்கியே டீனா அப்புறம் என்ன” என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தார் ஜான். தன் கையில் வைத்திருந்த மருந்து சீட்டில் டாக்டரின் தொலைபேசி எண் இருப்பதை கூறுகிறார் என்று அறிந்த கிறிஸ்டினா தன் கணவர் நீண்ட நாட்களுக்கு பிறகு இது போல சகஜமாக பேசி சிரிப்பதை பார்த்தபோது சந்தோஷத்தில் கண்கள் கலங்குவதை கட்டுப்படுத்த மிகவும் போராடினார்.
மேஜைமேல் கருஞ்சிவப்பு மற்றும் கருமையான ஊதாவும் கலந்த நிறத்தில் தபால் ஒன்று இருப்பதை கவனித்த ஜான் “டீனா என்ன அது போஸ்டல் கவர்?” என்றார். “சொல்ல மறந்துட்டேன் ஜான் அது உங்களுக்குத்தான்” என்று கூறிவிட்டு அந்த தபாலை எடுத்து ஜானிடம் நீட்டினார் கிறிஸ்டினா. தபாலை வாங்கி பிரித்தபோது அதில் ஒரே ஒரு வெள்ளைத்தாளில் கமிஷனர் என்று எழுதியிருந்தது அதற்கு கீழே ஸ்கேன் செய்யக்கூடிய பார்கோட் ஒன்று இருந்தது. “உங்கள் கேள்விகளுக்கு நீங்கள் வீட்டிற்கு சென்ற பிறகு பதில் கிடைக்கும்” என்று கமிஷனர் கூறியது நினைவிற்கு வந்தது. உடனே “இது எப்ப வந்தது டீனா?”என்றார் ஜான். “காலையிலேயே வந்துடுச்சு ஜான். சூசிக்கு உடம்பு சரியில்லாமல் போன யோசனையில் இதை உங்களிடம் சொல்ல மறந்துட்டேன்” என்றார் கிறிஸ்டினா. “பரவாஇல்லை விடு, வா சாப்பிடலாம்” எனக்கு பசிக்குது என்று தன்னை தோள்களில் அணைத்தவாறு நடக்கத் தொடங்கிய ஜானை பார்த்து கிறிஸ்டினாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடியது. டீனாவின் கண்ணீரை பார்த்தவுடன் “வாட் இஸ் திஸ் டீனா?, இப்ப என்ன ஆச்சு” என்றார் ஜான். ஒன்னும் இல்லை நீங்க உக்காருங்க என்று அமரவைத்து உணவுகளைப் பரிமாறுவதற்கு எடுத்துக்கொண்டிருந்த கிறிஸ்டினாவிடம் “டீனா சர்ச்சுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு இன்னைக்கு ஈவினிங் போவோம். கலர் டிரஸ் போட்டே ரொம்ப நாள் ஆச்சு, நீயே ஏதாவது ஒன்னு சூஸ் பண்ணி அப்புறமா அதை அயன் பண்ணிவிடு. நான் சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுத்து எழுந்திருக்கிறேன்” என்றார் ஜான். புன்னகையுடன் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன் ஓகே சார் என்றார் கிறிஸ்டினா.
( தொடரும்…)