ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட திட்ட அறிக்கை வங்கி ரூ.1 கோடி செலவில் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜவஹர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: 2022-23ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, “தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் துவங்க சாதகமாக உள்ள தொழில் திட்டங்களை கண்டறிந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட உதவிடும் பொருட்டு மாவட்ட வாரியாக தொழில்நுட்ப பொருளாதார ஆய்வு நடத்தப்படும். அதன்மூலம், திட்ட அறிக்கை வங்கி ஒன்று ரூ.1 கோடி செலவில் உருவாக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 2022-23ம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை புதிய வகை தொழில்களில் ஈடுபடுத்திட உதவிடும் பொருட்டு மாவட்ட வாரியான வருமானம் ஈட்டக்கூடிய தொழில்நுட்ப பொருளாதார ஆய்வினை மேற்கொண்டு திட்ட அறிக்கை வங்கியை வழிகாட்டு நெறிமுறைகளின்படி உருவாக்க ஏதுவாக ரூ.1 கோடி ஒன்றிய அரசின் எஸ்சிஏ டூ எஸ்சிபி நிதி ஒதுக்கீட்டில் இருந்து செலவிட நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.