கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக கோயில்களில் 217 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியில் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, 31 ஜோடிகளுக்கு ரூ.72,000 மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறப்புக்குரிய துறைக்கு பொறுப்பேற்று பல்வேறு சாதனைகளை அமைச்சர் சேகர்பாபு நிகழ்த்தி வருகிறார்.
அமைச்சர் சேகர் பாபு முதல்வரையே வேலை வாங்குகிறார். கோயில் பொது சொத்துகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். ரூ.3,700 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கல்லூரிகளை அரசு தொடங்கி இருக்கிறது. ஒன்றரை ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்காததால் மதத்தை வைத்து குற்றம், குறைகளை திமுக ஆட்சி மீது சொல்கிறார்கள்.
அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் உரிமையை மீட்டு தந்திருக்கிறது திமுக அரசு. கோயில்கள் என்பது மக்களுக்கானது, கோயில் ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல. கோயில் மக்களுக்கு என்பதற்குத்தான் நீதிக்கட்சி ஆட்சியில் இந்த துறை உருவாக்கப்பட்டது. ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய பெருமை கருணாநிதியை சேரும். வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி நடத்தி வருகிறேன். குழந்தைகளை ஒன்றோ, இரண்டோடு நிறுத்திக்கொள்ளுங்கள். குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.