திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் உட்பட பல்வேறு குறைதீர் கூட்டங்களிலும் கல்குவாரிகள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பாக விவசாயிகள் தரப்பில் தமிழக முதல்வர் வரை புகார் மனுக்கள் சென்றன. இதையடுத்து அதிகாரிகள் குழு சமீபத்தில் ஆய்வு செய்து, விதிமீறலில் ஈடுபட்ட கல்குவாரிகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்த்திராத வகையில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிமவளத்துறை உதவி இயக்குநர் வள்ளல் அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு மாவட்ட ஆட்சியர் சு.வினீத், வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையிலான அதிகாரிகள் அங்கு வரும் புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டனர். இது அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, “கல்குவாரிகள் மீது பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வரும்பட்சத்தில் அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். அதேபோல், கனிமவளத்துறையில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார் மனுக்கள் தேங்காத வகையில், கனிமவளத்துறை வேகமாக செயல்பட வேண்டும். கல்குவாரிகள் மீதான புகார்கள் தொடர்பாக மனுக்கள் அளித்தால், ஒருவார காலத்துக்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், அது தொடர்பான அறிக்கை ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக, கனிமவளத்துறை அதிகாரிகள் மாதந்தோறும் ஆட்சியர் அறையில் வந்து அவரை சந்திப்பார்கள். தற்போது ஆட்சியர் கனிம வளத்துறை அதிகாரிகள் அலுவலகத்துக்கு சென்று ஆட்சியர் விசாரித்துள்ளார். தொடர்ச்சியாக புகார்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, இந்த விசாரணை நடந்துள்ளது” என்றனர்.