புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியன இணைந்து நடத்திய இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அழ.வள்ளியப்பாவின் படத்தைத் திறந்துவைத்து, நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். தொடர்ந்து, நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி ஆட்சியர் பேசியது:
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய புத்தகங்களை படிக்கத் தொடங்கினால் அதில் உள்ள வீச்சு, வேறெந்த கவிஞரின் எழுத்து நடையிலும் இல்லை என்பது புரியும். முக்கியமாக தனது கதைகளில் சமூகத்துக்குத் தேவையான கருத்துகளையும் அவர் வெளிப்படுத்தினார்.
குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற கதைகளைப் படிப்பதன் மூலம் சரளமாக, எவ்வித தயக்கமுமின்றி மேடை பேச்சில் ஒளிர்ந்தவர்கள் பலருண்டு. ஆனால், இன்று குழந்தை இலக்கிய கவிஞர்கள் குறைந்துவிட்டனர். எனவே, பெற்றோர் அனைவரும் தங்களது குழந்தைகளை அதிகஅளவில் குழந்தைப் பருவ புத்தகங்களைப் படிக்க வைக்க வேண்டும். அத்தகைய குழந்தைகள்தான் பிற்காலத்தில் சான்றோர்களாக வர முடியும். அதேவேளையில், குழந்தை இலக்கியத்தையும், குழந்தை இலக்கியக் கவிஞர்களையும் ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது என்றார்.
விழாவில் அழ.வள்ளியப்பாவின் மகளும், சாகித்ய புரஸ்கார் விருதாளருமான தேவி நாச்சியப்பன் ஏற்புரை வழங்கினார். புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், கவிஞர் தங்கம் மூர்த்தி, வட்டாட்சியர் விஜயலட்சுமி, வாசகர் பேரவைச் செயலாளர் எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
