தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, 3 அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக (ஏடிஜிபி) சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அவ்வப்போது ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் கார் வெடிப்பு நிகழ்ந்தது. இது பெரும் சர்ச்சையானது. இந்த சம்பவத்துக்கு பின்னணியில் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இதனால் டிஜிபி சைலேந்திர பாபு உயர் அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கார் வெடிப்பில் இறந்தவரின் பெயர் ஜமேஷா முபின் என்பது தெரியவந்தது. இவரிடம் 2019ல் என்ஐஏ விசாரித்ததும் தெரியவந்தது. மேலும் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 6 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடிகள் உள்ளிட்டவை வரையப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த கார் வெடிப்பு பற்றி தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். இதனை தமிழக போலீசார் மறுத்து வந்தனர். இந்நிலையில் தான் விரைவில் தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குனர் தினகர் குப்தா, தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து ஆலோசனை நடத்தி முக்கிய தகவல்கள் பெற்று சென்றார்.
இந்நிலையில் தான் இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, சில அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் உள்துறை தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக இருக்கும் சங்கர் தமிழக சட்ட ஒழுங்கு பிரிவு ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த தாமரை கண்ணன் ஓய்வு பெற்ற நிலையில் சங்கர் அந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜிபியாக உள்ள வெங்கடரமணன் கூடுதல் பொறுப்பாக சென்னை நிர்வாக பிரிவு ஏடிஜிபி பொறுப்பையும் சேர்த்து கவனிக்க உள்ளார்.
சென்னையில் ஏடிஜிபி அந்தஸ்தில் சிவில் டிஃபன்ஸ் இயக்குனர் மற்றும் ஊர்க்காவல்படையின் கூடுதல் பொது காமாண்டோவாக உள்ள ஜெயராம், கூடுதல் பொறுப்பாக சென்னை ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபி பொறுப்பையும் வகிக்க உள்ளார். ஜெயராம் நியமனத்துக்கு முன்பு இந்த ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபி பொறுப்பு காலியாக இருந்தது.
தமிழகத்தின் டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு, சென்னையில் போலீஸ் பயிற்சி கல்லூரியின் டிஜிபி பொறுப்பையும் சேர்த்து நிர்வகிக்க உள்ளார்.
இதேபோல் தூத்துக்குடி ரூரல் உதவி சூப்பிரண்டாக செயல்பட்டு வரும் சந்தோஷ்க்கு எஸ்பி அந்தஸ்து வழங்கப்படுகிறது. இவர் கோவை மாநகர வடக்கு சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்படுகிறார்.
கோவை மாநகர வடக்கு சட்டம்- ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராக செயல்பட்டு வரும் மதிவாணன், கோவை மாநகர போக்குவரத்து பிரிவு துணை போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகர போக்குவரத்து பிரிவு துணை போலீஸ் கமிஷனர் அசோக் குமார், சென்னை சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் கடலோர காவல்படையில் சூப்பிரண்டாக(எஸ்பி) இருக்கும் செல்வகுமார், சென்னையில் தமிழ்நாடு காமாண்டோ பிரிவு சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு காமாண்டோ பிரிவு சூப்பிரண்டாக(எஸ்பி) செயல்பட்டு வரும் ராமர், நாகப்பட்டினம் கடலோர காவல்டை பிரிவு சூப்பிரண்டாக நியமனம் செய்யப்படுகிறார் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.