எம்ஜிஆர் என்கிற ஆலமரத்தில் எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ பறவைகள் இளைப்பாறின, அடைக்கலம் அடைந்து அளப்பரிய இன்பத்தை பெற்றன, இன்று தமிழகத்தின் முக்கிய நபர்களாக இருக்கும் எத்தனையோ முக்கிய பிரமுகர்களின் அடித்தள வாழ்விற்கு அஸ்திவாரம் இட்டவர் முகவரி தந்தவர் எம்ஜிஆர்…
அந்த வகையில் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதியானது எம்ஜிஆர் அவர்களின் நினைவு தினமாகும். பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்கள் இறைவனடி சேர்ந்து 34 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. ஆனால் அவரின் புகழொளியானது சிறிதும் மங்காமல், குண்டுமணி அளவுக் கூட குறையாமல் மணம் வீசும் சந்தனமாய் இன்றும் நம்மண்ணில் நறுமணம் வீசிக் கொண்டே இருக்கிறது மக்கள் மனதில் நீங்காத ஒரு நிரந்தர இடத்தை ஆகிரமித்துக் கொண்டிருக்கிறது..
மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு மறையாத அந்த ராமசந்திரனை பற்றி எழுத நுண்ணறிவு புலனாய்வு மாத இதழின் ஆசிரியர் திரு.சிவகுமார் அவர்கள் எனக்கு ஒரு அருமையான வாய்ப்பை நல்கியுள்ளார் அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்…
எம்ஜிஆர் அவர்கள் கஷ்டம் என்கிற மலைகளைக் கடந்து சிகரத்தை அடைந்து, சமூக புறக்கணிப்பு என்கிற நெருப்பாற்றில் நீந்தி, 20 ஆண்டுகளுக்கு மேலாக விடா முயற்சி செய்து திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் விஸ்வரூபம் எடுத்தார் மூன்று முறை தொடர்ந்து தமிழக முதல்வராகி ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மனிதருள் மாணிக்கமாக திகழ்கிறார்….
மாதம் ஒரு திருக்குறளை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு எம்ஜிஆர் அவர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை திருக்குறளோடு உவமைப்படுத்தி உங்களுக்கு தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்…
எம்ஜிஆர் அவர்கள் நன்றி மறவாதவர் அதனால்தான் அவர்..
பொன் பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
என்று பாடினார் பாடியதோடு மட்டுமல்லாமல் அதை தனது வாழ்விலும் நடைமுறைப்படுத்தினார்…
அந்த வகையில் எம்ஜிஆர் அவர்கள் நன்றி மறவாதவர் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக அவரது வாழ்வில் நடந்த நிகழ்வு பின்வருமாறு..
பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து…
விழா மேடையில் பல்வேறு கலைஞர்கள், பழம்பெரும் நடிகர்கள் அவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.. அவ்விழாவில் கலந்து கொண்டவர்களில் மிகச் சிறந்த நடிகரான எம்.கே.ராதா அவர்களும் ஒருவராவார், விழாவின் மேடையின் நடுவில் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அமர்ந்திருந்தார், அவர் அருகே அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அமர்ந்திருந்தார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியானது வெகு சிறப்பாக சென்று கொண்டிருந்தது…
முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவராக வரிசையாக மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர்.
இப்போது எம்.கே. ராதா அவர்கள் விருது வாங்கச் செல்லும்போது முதல்வர் அவர்கள் அவ்விருதை அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களின் கரங்களில் கொடுத்து எம்.கே.ராதா அவர்களுக்கு விருதை தரச் செய்கிறார். எம்.கே.ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி.
ராதா அவர்களுக்கும் மிகுந்த ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி.
மேடையில் முதல்வரைக் காணவில்லை. குனிந்து பார்த்தால் முதல்வர் அவர்கள் எம்.கே.ராதா அவர்களின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப் பார்த்து இன்னும் அதிர்ச்சி ராதாவுக்கு. எம்.கே.ராதா ஏதோ சொல்ல முயலும் போது, அவரை பேச விடாமல் தடுத்து எம்.ஜி.ஆர் கூறியதாவது.
“நான் ஆரம்பக் காலத்தில் கஷ்டப்படும்போது” தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும், தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி, இருக்க இடம், உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்தீர்கள்.
நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தங்களை அவமதிக்கும் செயலாகும். தங்களன்றோ என்னை ஆசீர்வதித்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்க வேண்டும், என்று சொன்னதுதான் தாமதம், எம்.கே.ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின…
ஒரு மாநில முதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச் செய்து எம்.கே.ராதா அவர்களுக்குப் பெருமை சேர்த்த பொன்மனச் செம்மலைப் புகழ வார்த்தைகள்தான் ஏது?
மேற்காணும் நிகழ்வானது
அய்யன் திருவள்ளுவர் கூறியது போல
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு
என்கின்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது…
வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய காரணத்தினால்தான் எம்ஜிஆர் என்கின்ற மூன்றெழுத்தானது தமிழக மக்களின் தலையெழுத்தையும், சரித்திரத்தையும் தரித்திரத்தையும் மாற்றி உள்ளது.
மன்னாதி மன்னன் எம்ஜிஆர் அவர்களின் புகழ் வாழ்க…
(வழி தொடரும்…)