பொறுப்பு துறப்பு
இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை. இது எந்த ஒரு உண்மை சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டது அல்ல ஆகவே நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இக்கதையின் மூலம் ஏற்படும் மன உளைச்சலுக்கோ, குழப்பங்களுகோ நிர்வாகமும் ஆசிரியரும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜான் இடையறாது தூங்கினார். சில மணி நேரம் தூங்கிய பிறகு சுமார் மாலை 4 மணியளவில் ஜான் எழுந்தார். ஜான் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது மணி 4.06. மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்து குளியலறைக்கு சென்றார். துண்டு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தது. பொதுவாக ஜான் காலை வழக்கத்தில் துண்டை தன்னுடன் எடுத்துக்கொள்வார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜான் வீட்டில் மதியம் தங்குகிறார். ஆகவே அவருக்கு இது சற்று புதிதாக தோன்றியது. குளித்து முடித்து வெளியே வந்தபோது கருநீல வண்ணத்தில் சட்டையும், பால் வெள்ளை நிறத்தில் வேஷ்டியும் மெத்தைமேல் தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஆடைகளை அணிந்துகொண்டு வெளியே வந்த ஜான் தன் மனைவியைத் தேடி சமையல் கட்டில் நுழைந்தார்.
ஜான் வருவதைப் பார்த்து திரும்பி கிறிஸ்டினா “என்ன ஜான் இன்னிக்கு ரொம்ப நேரம் குளிச்சிட்டீங்க” என்றார்.
”ஐ டோன்ட் நோ டீனா, ஐ பீல் நியூ அண்ட் ரிலாக்ஸ். இந்த வேஷ்டி கட்டி ரொம்ப வருஷங்கள் ஆகுது இந்த டிரஸ் சூஸ் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றார் ஜான்.
“எனக்கும் தான் ஜான் புதுசா இருக்கு நீங்க மத்தியானத்தில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்ததே இல்லை, கடைசியா எப்ப நீங்க என்னை சர்ச்சுக்கு போலாம்னு கூப்பிட்டீங்கனு ஞாபகமில்லை. உங்கள பாக்குறதுக்கு எனக்கு சந்தோஷமா இருக்கு ஜான் அதனாலதான் கொஞ்சம் டிஃப்ரண்டா இருக்கட்டுமேன்னு இது எடுத்து வச்சேன்” என்றார் கிறிஸ்டினா. முகத்தில் புன்னகையுடன் “ரிட்டயர்மென்ட் நெருங்கிடுச்சு இனிமே இப்படித்தான் டீனா” என்றார் ஜான். வருஷம் போனதே தெரியல ஜான் என்ற கிருஸ்டினா 10 நிமிடங்களில் புறப்பட்டார். இருவரும் கிளம்பி சர்ச்சு வளாகத்தில் நுழைந்தபோது நேரம் சுமார் ஐந்து மணி.
தூரத்தில் ஜான் வருவதை பார்த்த பாதிரியார் தனது அருகில் இருந்த உதவியாளரிடம் சற்று நேரத்தில் வந்துவிடுவதாக கூறிவிட்டு தனது அறைக்கு சென்றார். வருடாவருடம் கிருஸ்த்துமஸ்தன்று இரவில் மட்டும் சர்ச்சுக்கு வருவதால் பல வருடம் கழித்து பகலில் வருவது ஜானுக்கு வித்யாசமாக தோன்றியது. தேவாலய அறிவிப்பு பலகையில் அடுத்த பிரார்த்தனை கூட்டம் மாலை 6 மணிக்கு என்று இருந்தது இதை கவனித்த ஜான் “டீனா இன்னும் நேரம் இருக்கு போல இருக்கு நாம வேணும்னா பக்கத்துல போயிட்டு வரலாமா” என்றார். கிறிஸ்டினாவிற்கு நடப்பது கனவா இல்லை நினைவா என்பது புரியாமல் திகைத்து கொண்டே சரி என்பது போல் தலையை ஆட்டினார். இருவரும் வெளியே கிளம்ப புறப்பட்டு திரும்பியபோது தூரத்தில் ஒரு குரல் “சார் சார் நில்லுங்க” என்று கேட்டது. சட்டென்று திரும்பிய கிறிஸ்டினா “ஜான் உங்களதான் கூப்பிடுறாரு” என்று கூறியதும் திரும்பிய ஜான் பாதிரியாரின் உதவியாளர் ஓடி வருவதைக் கண்டார்.
இவர்கள் அருகே வந்த பாதிரியாரின் உதவியாளர் “சார் ஆர் யூ மிஸ்டர் ஜான்?” என்றார். “ஆமா பிரதர் நான்தான் என்ன ஆச்சு என்ன விஷயம்” என்றார் ஜான். “சார் உங்கள பாக்கணும்னு பாதர் கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றார் பாதிரியாரின் உதவியாளர். “என்னையா!?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் ஜான்.
“ஆமா சார் நீங்க தானே ஜான்” என்று கேட்டார் பாதிரியாரின் உதவியாளர். “ஆமாம் பிரதர் நான்தான் ஜான் ஆனால் என்னை எதுக்காக கூப்பிட்டார். நா வழக்கமா கூட வர மாட்டேன். கடைசியா நான் சர்ச்சுக்கு வந்தது போன கிறிஸ்துமஸுக்கு தான் பிரதர். அப்படி இருக்கிறப்போ என்னை எதுக்காக கூப்பிடனும்? வேற யாராவதா இருக்க போறாங்க நீங்க போய் பக்கத்துல இருக்கவங்க யாராவது ஜான் இருக்காங்களான்னு விசாரிங்க பிரதர்” என்றார் ஜான். “சார் பாதர் உங்களை பார்த்து கையை காட்டி ‘அந்த நீல கலர் சட்டை போட்டிருக்கவர் பேரு ஜான், அவரை அழைச்சிட்டு வா’ என்று தான் சொன்னார் இங்கே நீல கலர் சட்டை போட்டிருக்கும் ஒரே ஆள் நீங்கதான், உங்க பேரும் இப்பதான் சொன்னீங்க, அப்போ உங்களை தவிர வேறு யாரும் இருக்க முடியுமா? நான் சரியாதான் சார் கூப்பிடுறேன் வாங்க போலாம்” என்று கூறிவிட்டு செல்லும் வழி நோக்கி கையை உயர்த்தி காட்டினார் பாதிரியாரின் உதவியாளர்.
ஜானும் டீனாவும் பாதிரியாரின் உதவியாளர் கை நீட்டிய திசைநோக்கி தேவாலயத்திற்குள் நடக்கத் தொடங்கினர் அவரும் பின் தொடர்ந்தார். தேவாலயத்தின் மேடை பகுதியை அடைந்ததும் கிறிஸ்டினாவிடம் “சிஸ்டர் இங்கே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று கூறிவிட்டு ஜானை மட்டும் மேடை பகுதிக்கு பின்னாலுள்ள பாதிரியாரின் தனியறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு தன் கையில் ஒரு பையுடன் நின்று கொண்டிருந்தார் பாதிரியார். அழைத்து வந்த உதவியாளரை செல்லும்படி கையசைத்துவிட்டு ஜானை பார்த்து “மிஸ்டர் ஜான் இப் யூ டோன்ட் மைன்ட் ப்ளீஸ் குளோஸ் த டோர்” என்றார் பாதிரியார். கதவை சாத்திய ஜான் பாதிரியாரை பார்த்து “பாதர் உங்களுக்கு என்ன எப்படி தெரியும்” என்று கேட்டார். அதற்கு பாதிரியார் “உங்க பொண்ணு ஜான்” என்றார். ஜானின் கண்களும் மனதும் குழம்பியது.
தயக்கத்துடன் ஜான் பாதிரியாரை பார்த்து “ப்ளீஸ் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பாதர்” என்றார். “அதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை ஜான் இந்த பையில் உங்களுக்கு சேர வேண்டிய பொருட்கள் உள்ளது அதோடு உங்கள் மகன் உங்களுக்காக எழுதிய கடிதம் ஒன்று உள்ளது அதை படித்தால் உங்களுக்கு எல்லாம் நன்றாக விளங்கும் ஒன்னும் அவசரம் இல்லை ஜான் நான் அரை மணி நேரம் கழித்து வரேன் இங்கே உக்காந்து இது என்னன்னு பாருங்க. கர்த்தர் உங்களுக்கு துணையாக இருப்பார் ப்ரைஸ் தி லார்ட்” என்று கூறிவிட்டு அறைக்கு வெளியே போனார் பாதிரியார். ஜானின் கைகள் நடுங்கின மெதுவாக பையின் ஒரு பகுதியை திறந்தார். உள்ளே டைரி ஒன்றின் நடுவே மறைக்கப்பட்டு கடிதம் ஒன்று இருந்தது மெதுவாக டைரியை திறந்த ஜானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
( தொடரும்…)