ஒரத்தநாடு அருகே இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் புதன்கிழமை தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு தெருவைச் சேர்ந்த துரைராசு மகன் ஏசுராஜா. இவருடைய சகோதரர் சிவராஜன் டிசம்பர் 15ஆம் தேதி காலமானார்.
சிவராஜனின் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்து, இதுதொடர்பாக ஆம்பலாப்பட்டு தெற்கு கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை ஏசுராஜா அணுகினாராம். சான்றிதழ் வழங்க ரூ. 1000 தர வேண்டும் என முருகேசன் கைப்பேசியில் தெரிவித்துள்ளார். இந்த குரல் பதிவை ஏசுராஜா பதிவு செய்திருந்தாராம். இந்த ஆடியோ பதிவு தற்போது சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது.
லஞ்சம் கேட்டதாக முருகேசன் மீது ஆட்சியர் பொன்ராஜ் ஆலிவரிடம் ஏசுராஜா புதன்கிழமை புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக ஒரத்தநாடு வட்டாட்சியர் சுரேஷ் கூறியது: ஆட்சியர் உத்தரவின்படி, கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் விசாரணை நடத்தப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏசுராஜா கோரிய இறப்பு சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டு விட்டது என்றார்.