தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த அதிக அளவு மழை, அதன் காரணமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க 50 கோடியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 43.92 கோடி ரூபாய் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, “கடந்த மாதம் பெய்த அதீத கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 32 ஆயிரத்து 533 ஹெக்டேர் நிலங்களுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க 43.92 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதனைக்கொண்டு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாய் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை அடுத்த வாரம் வந்து சேரும். உடனே பொங்கலுக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்” என ஆட்சியர் தெரிவித்தார்.
பொதுவாக சம்பா அறுவடையானது பொங்கலின்போது நடைபெறும். அப்போது அவர்களுக்கு வருவாய் கிடைக்கும் என்பதால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் இருப்பார்கள். அவர்களின் அந்த நம்பிக்கையை டிசம்பரில் பெய்த கனமழை சிதைத்துவிட்டாலும் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 5400 என்ற அளவில் தற்போது அரசு நிவாரணம் வழங்க உள்ளதால் அவர்களின் துயரங்கள் களையப்படும் என்ற நிலை உருவாகி உள்ளது.