காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு போலீஸாருக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் 2022-ம் ஆண்டு சவால்நிறைந்ததாகவும், வெற்றிகரமாகவும் இருந்தது. கடந்த ஆண்டு முழுவதும் எந்தவொரு சாதி அல்லது வகுப்புவாத மோதல், காவல்துறை துப்பாக்கிச் சூடு உள்பட பெரிய குற்றச் சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், மதுரை சித்திரை விழா, விநாயகர் சதுர்த்தி, திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா ஆகியவை அமைதியாக நடைபெற்று முடிந்தன. மாமல்ல புரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் உள்பட 2 ஆயிரம் வெளிநாட்டினருக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கினோம். போட்டி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
ஆபரேஷன் ரவுடி வேட்டையில் 3,949 பேர் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கடுமையான நடவடிக்கையால் மாநிலத்தில் திட்டமிட்ட குற்றங்களை செய்யும் குழுக்களின் தீயத் திட்டங்கள் பெரிய அளவில் தடுக்கப்பட்டுஉள்ளன.
ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டதன் காரணமாக 9,906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 13,491 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 24 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 4,141 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின்கீழ் 1,500 காவலர்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும்அனைத்து காவலர்களுக்கும் இரவு ரோந்துப்படி வழங்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது இதுவே முதல் முறை.
பணியின்போது உயிரிழந்த 1,132 காவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் மற்றும் காவல்நிலைய வரவேற்பாளர் பணிகள் வழங்கப்பட்டன. இந்தச் சாதனைகள் அனைத்தும் தமிழக காவல்துறையின் ஒவ்வொரு அதிகாரியாலும் மற்றும் ஆண் மற்றும் பெண் காவலர்களின் அர்ப்பணிப்பு மற்றும்கடமையின்பால் கொண்ட பற்றின் காரணமாகவே சாத்தியமானது.
காவல்துறைப் பணியில் வரும்காலங்கள் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். நமது பாரம்பரியம் மற்றும் காவல் பணியில் தொழில் சார்ந்த உயர் தரத்தை பராமரிக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழ்நாடு காவல்துறையின் கொடி உயர்ந்து பறந்திட உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்,