செய்தித்தாளைப்போல பல வகைகளில், பல வழிகளில் பயன்படும் பொருள் வேறு ஒன்றும் இல்லை, “இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்” என்பார்கள் அதுபோல இந்த செய்தித்தாளானது நமக்கு பல வழிகளில் பயன்படுகிறது…
ஆம் நண்பர்களே உடனே நாம் மடித்து கட்டும் உணவு பார்சலில் இருந்து அவசரத்திற்கு படுக்கும் பாயாக செய்தித்தாள் நமக்கு பெரிதும் பயன்படுகிறது…
விழா காலங்களின் பொழுது பஸ் ரயிலில் பயணம் செய்யும் பொழுது உட்காருவதற்கு இடம் கிடைக்காத நெருக்கடியான இக்கட்டான நேரங்களில் நான் கையில் வைத்திருக்கும் செய்தித்தாளை தரையில் விரித்து படுத்து விடுவேன்…
இருப்பதைக் கொண்டு வாழாதது, இல்லாததை நினைத்து ஏங்குவது, இழந்ததை நினைத்து வருத்தப்படுவது, கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் விடுவது, எதிர்காலத்தை நினைத்து பயப்படுவது போன்றவை சராசரி மனிதர்கள் செய்யும் மாபெரும் தவறாகும். நான் அந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன்..
சரி நண்பர்களே கட்டுரைக்கு நான் வருகிறேன்..
எம்.ஜி.ஆர், திரையுலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் மக்கள் நாயகனாக வலம் வந்தவர். அரசியல் ஈர்ப்பால் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் திராவிட முன்னேற்ற கழகத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், பின்னாளில் 17/10/1977 அன்று அஇஅதிமுக என்ற தனிக்கட்சியை தோற்றுவித்து தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று தமிழக முதல்வராகி, முதல்வர் பதவியை அலங்கரித்து மக்களின் மகத்தான ஆதரவை வரவேற்பை பெற்றவர்.
24/12/1987 அன்று இறைவனடி சேர்ந்தார், அவர் மறைந்து 35 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரது பெயரையும், படத்தையும் பயன்படுத்தி பல அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை செய்து வாக்குகளை கோரும் அளவுக்கு, தனக்கென ஒரு வாக்கு வங்கியை இன்றளவும் பெற்றிருக்கிறார் எம்ஜிஆர்.
இலங்கையில் தேயிலை உள்ளிட்ட பிற தோட்டங்கள் நிறைந்த கண்டி எனும் ஊரில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மருதூர் கோபாலன், சத்யபாமா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார், எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டரை ஆண்டுகளிலேயே தந்தை கோபாலன் இறந்து விட, தாயார் சத்யபாமா பூர்விகமான கேரளத்தின் பாலக்காடுக்கு திரும்ப முடிவெடுத்தார். ஆனால், உறவினர்களின் ஆதரவு கிடைக்காததால் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள உறவினரான வேலு அவர்களின் வீட்டில் தமது இரண்டு பிள்ளைகளுடன் அடைக்கலமானார் சத்யபாமா. அங்கு வீட்டு வேலை செய்து தனது இரு பிள்ளைகளை சத்யபாமா காப்பாற்றினார்.
பதினான்கு வயதில் நடிப்புத் துறைக்குள் நுழைந்த எம்ஜிஆருக்கு ஆரம்ப காலத்தில் கைகொடுத்தது மேடை நாடகமும் நாடகக் கலைஞர்களும்தான். பதின்ம வயதில் தனது சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியுடன் பாய்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேர்ந்தார் எம்ஜிஆர். அங்கு கிடைத்த சிறு, சிறு வேடங்களில் நடித்தாலும் எம்ஜிஆரின் கனவு வெள்ளித்திரை மீது இருந்ததோடு மட்டுமல்லாமல் இந்த நாட்டை ஆளக்கூடிய மன்னனாக நான் ஆக வேண்டும் என்ற கனவும் அவருக்கு இருந்தது.
தனது நெடுநாள் கனவை நாடோடி மன்னன் என்கிற திரைப்படத்தின் வாயிலாக நடிகராக மட்டுமல்லாமல் அப்படத்தின் இயக்குனராகவும் தன் திறமையை வெளிப்படுத்தி சரித்திர சாதனையை படைத்திருப்பார்.
அந்த காலத்தில் நடிப்புத் துறைக்குள் நுழைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அதுவும் கதாநாயகனாக வேண்டுமானால், அவருக்கு இயல்பாகவே ஆடலும், பாடலும், வார்த்தை சுத்தமாக தமிழ் பேசவும் சரியான உச்சரிப்பும் தெரிந்திருப்பது கட்டாயம்.
1936 ஆம் ஆண்டில் தனது 20 ஆவது வயதில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் சதி லீலாவதி என்ற படத்தில் ஓர் ஊழல் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார் எம்ஜிஆர். அதன் பிறகு சிறு, சிறு வேடங்கள் அவருக்கு கிடைத்தாலும், எல்லா திரை நாயக, நாயகிகளுக்கும் ஏற்படுவது போன்ற திருப்புமுனை, எம்ஜிஆருக்கு 1950 ஆம் ஆண்டில் நடந்தேறியது. அப்போது வரலாறறுக் காவியமான மந்திரி குமாரி என்ற படத்தில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆரின் கதாபாத்திரம், அவரை ஏழை, எளியவர்களின் நாயகனாக உலகுக்கு அடையாளப்படுத்தியது வெள்ளித்திரை.
1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்கின்ற முதல் படம், 1950 ஆம் ஆண்டு மந்திரகுமாரி என்கிற இரண்டாவது படம் வெற்றி. இடைப்பட்ட காலம் 14 ஆண்டுகள்.
ராமன் நாட்டை ஆள்வதற்காக 14 ஆண்டுகள் ராம அவதாரம் எடுத்து வனவாசம் சென்றார், இந்த ராமச்சந்திரனும் 14 ஆண்டுகள் கடும் தவமிருந்து, கடுமையான முயற்சி செய்து திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
என்கின்ற ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக எம்ஜிஆர் அவர்களின் ஆரம்ப காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவம் பின்வருமாறு…
எம்ஜிஆர் திரையுலகத்திற்கு வருவதற்கு முன், நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவமென நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலு அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்..
எம்ஜிஆர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் வடசென்னையில் ஒத்தவாடை என்ற இடத்தில் தங்கியிருந்தார்.
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனை தாண்டி வெகு தொலைவில் இருக்கிறது அந்த இடம். நடிகர் தங்கவேலு அவர்களும் அங்கேதான் தங்கி இருந்தாராம்.. அப்போது மந்தைவெளியில் உள்ள கபாலி தியேட்டரில் ஒரு ஆங்கிலப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க ஆசைப்பட்டாராம் எம்ஜிஆர். கூடவே தங்கவேலுவை அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.
படம் முடிந்தது. ‘அடடா’ என்றார் தங்கவேலு.
“என்ன அண்ணே?” என்று கேட்டார் எம்ஜிஆர்..
“நேரம் ஆயிடுச்சே. நாம தங்கியிருக்கற இடத்துக்கு போக வேண்டிய கடைசி பஸ் போயிடுமே…”
“வாங்கண்ணே. சீக்கிரம் பஸ் ஸ்டாண்டுக்கு போகலாம்.” என்றவாறு இருவரும் அடித்துப் பிடித்து
தியேட்டரிலிருந்து விரைவாக மயிலாப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து வந்தார்கள். அப்படியும் இவர்கள் வந்து சேர்வதற்குள் கடைசி பஸ் புறப்பட்டு போய்விட்டது.
‘இப்போது என்ன செய்வது’ என்றார் தங்கவேலு.
நாம் தங்கியிருக்கும் இடத்திற்கு நடந்தே போய்விடலாமா?
ஒத்தவாடை இங்கிருந்து வெகுதொலைவில் இருக்கிறது. நடந்து போவதற்குள் விடிந்து விடும்.
ஒன்று செய்தால் என்ன? இங்கேயே மயிலாப்பூரில் தங்கிக் கொள்ளலாம். அதிகாலை 5 மணிக்கு மேல் வரும் முதல் பஸ்ஸில் ஏறி போய்விடலாம் என்றார் எம்ஜிஆர்.
வேறுவழியின்றி தங்கவேலுவும் சம்மதித்தார். எல்லாம் சரி இப்போது எங்கே படுப்பது ?
எம்ஜிஆர் ஒரு சிறிதும் யோசிக்காமல் தன் கையில் வைத்திருந்த செய்தித்தாள்களை காட்டினார். “இதோ, இதை விரித்து இந்த பிளாட்பாரத்தில் படுத்துக்கொள்ளலாம் அண்ணே.”
அடுத்த நிமிடமே கொஞ்சமும் தயங்காமல் மயிலாப்பூர் பிளாட்பாரத்தில் நியூஸ் பேப்பரை விரித்து எம்ஜிஆரும் தங்கவேலுவும் படுத்துக் கொண்டார்களாம். தூக்கம் வராமல் கொஞ்ச நேரம் கழித்து திரும்பிப் பார்த்தார் தங்கவேலு.
எம்ஜிஆர் ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.
என்ன தீவிரமாக யோசனை என்று கேட்டிருக்கிறார் தங்கவேலு.
அதற்கு எம்ஜிஆர் சொன்னாராம்: “அண்ணே, இன்றைக்கு இந்த ரோட்டில் படுத்திருக்கும் இதே ராமச்சந்திரன், ஒருநாள் இந்த நாட்டையே ஆளப்போகிறான்.”
ஆச்சரியப்பட்டு போனார் தங்கவேலு. படுப்பதற்கு ஒரு இடம் இல்லை. பாயும் தலையணையும் கூட இல்லை. செய்தித்தாளை விரித்து பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் அந்த நேரத்திலும் எம்ஜிஆரின் இந்த தன்னம்பிக்கையைக் கண்டு அசந்து போனாராம் தங்கவேலு.
எனக்கும் கூட இதைப் படித்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. எவ்வளவு அசாத்திய தன்னம்பிக்கையும், அசைக்க முடியாத நேர்மறை எண்ணங்களும் இருந்திருந்தால் எம்ஜிஆர் இப்படி சொல்லி இருக்க முடியும்.!
எம்ஜிஆர் ஒரு லட்சியத்தை நினைத்தார். அதை அடைவதற்காக அதை நோக்கி பயணமும் செய்தார். நாம் எதை நோக்கி தீவிரமாக பயணம் செய்கிறோமோ, அதுவும் நம்மை நோக்கி தீவிரமாக பயணம் செய்கிறது.
அதனால்தான் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்றார் வீரத்துறவி விவேகானந்தர்… கனவு காணுங்கள் நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் வருவதே கனவு என்றார் மேதகு அப்துல் கலாம் ஐயா அவர்கள்…
எண்ணம் போல் வாழ்வு என்றார்கள் நம் பெரியோர்கள்… மனிதனின் எண்ணத்திற்கு வலிமை இருக்கிறது ஆம் எண்ணம் தான் செயலாக மாறும், செயல்கள்தான் பழக்கமாக மாறும், பழக்கங்கள்தான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும், நேர்மறையான எண்ணங்கள் தான் நமது எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக, அச்சாணியாக ஆணிவேராக, அஸ்திவாரமாக அமையும்.
அந்த நேர்மறையான எண்ணம்தான், தன்னம்பிக்கைதான் எம்ஜிஆருக்கு, பல விஷயங்கள் அவரை முதன்மையானவராக உலகுக்கு அடையாளப்படுத்தியது. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்வராக முதலாவதாக பதவிக்கு வந்த முதல் நடிகர் எம்ஜிஆரே ஆவார். அதேபோல, இந்திய திரைப்பட வரலாற்றில், குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்ற முதலாவது நடிகராக அவர் அறியப்பட்டார். 1972ஆம் ஆண்டில் ரிக்ஷாகாரன் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு அந்த விருது கிடைத்தது.
ஒரு செயலைச் செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணிய எண்ணத்திலே உறுதி உடையவர்களாக, உழைப்பவர்களாக, உடைந்து போகாதவர்களாக இருந்தால் நினைத்ததை நினைத்தபடியே செய்து, வெற்றி அடைவார்கள் என்பதே எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு கற்றுத் தரும் பாடமாகும். தான் நினைத்ததை நடத்தி முடித்த பொன்மனச் செம்மல் எம்ஜிஆரை போலவே நீங்களும் நினைத்ததை முடிப்பவராக திகழ வேண்டும் எண்ணியதை எண்ணியவாறு பெறவேண்டும் என்பதே எம்ஜிஆர்தாசனாகிய எனது வேண்டுகோள் விருப்பம் ஆகும்…
(வழி தொடரும்…)