சென்னை குரு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் வளர்ச்சி அலுவலகம் சார்பில் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு மற்றும் தொழில் கண்காட்சி இரண்டு தினங்கள் திருச்சியிலும் மற்றும் சென்னையில் தமிழ்நாடு எம்எஸ்எம்இ துறையின் FaMe TN நிறுவனம் இணைந்து இரண்டு தினங்கள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.எம்.பி பிரதீப் குமார் இ.ஆ.ப, அவர்களும் மற்றும் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் திருமதி.சிஜி தாமஸ் வைத்யன் இ.ஆ.ப, அவர்களும் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள், அரசுத்துறை அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், தொழிலதிபர்கள், வருங்கால தொழில் முனைவோர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையினர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் குறைந்தபட்சம் இரண்டு நபர்களாவது வெற்றிகரமான தொழில் முனைவோராக உருவானால் நிகழ்வின் நோக்கம் நிறைவடைந்ததாக கருதலாம் என்றார்.
மேலும் வருங்காலத்தில் தொழில் முனைவோராக ஆசைப்படும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த நல்ல வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
இதேபோல் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பங்கேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தொழில் துறைக்கான பல்வேறு புதிய திட்டங்களை பற்றி எடுத்துரைத்து சிறப்பு செய்தார். மேலும் இந்த நிகழ்வின் போது ஆவடி கனரக தொழிற்சாலையில் கொள்முதல் ஆணையை எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொழில் வணிக கூடுதல் ஆணையர் திருமதி.கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப, FaMe TN பொது மேலாளர் திரு.சு சக்திவேல், சென்னை குரு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அலுவலகத்தின் இணை இயக்குநர் திரு.எஸ்.சுரேஷ் பாபுஜி அவர்களும் மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பெருந்தொற்று காலங்களை கடந்து சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தொழில் முனைவோருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதால் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் இந்த நிகழ்வில்பங்கு கொண்டனர். இந்த நிகழ்ச்சி பற்றி ஏற்பாட்டாளர்கள் கூறும்போது திருச்சி மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களிலும் மக்கள் ஆர்வத்தோடு பங்கு கொண்டதாகவும் மக்களின் வரவேற்பை கருத்தில் கொண்டு மேலும் ஒரு மேம்பாட்டு நிகழ்வு மற்றும் தொழில் கண்காட்சி தென் மண்டலத்தில் நடத்தப்பட உள்ளதாக கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சி பற்றி இளைய தலைமுறை தொழில் அதிபர் ஒருவரிடம் நாம் கருத்து கேட்டபோது பல தொழில் துறை நிறுவனங்கள் பங்கு கொண்டதன் மூலம் பல புதிய தொழில் மற்றும் தொழில் வளர்ச்சி விற்பனையாளர் மேம்பாட்டிற்கு உண்டான வாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ள உதவியாக இருந்ததோடு சம்பந்தப்பட்ட நிறுவன உயர் அதிகாரிகளுடன் நேரடியாக கலந்துரையாடி தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள பேர் உதவியாக அமைந்தது என்றும் இதுபோன்று நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்காக தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.