வேளச்சேரி ஏரியில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்தது எப்படி என பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றவும், வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் விடுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்குவந்த புகார் குறித்து நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்தியகோபால் ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
இந்த வழக்கில் தமிழக அரசின் நீர்வள ஆதார அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில், ‘வேளச்சேரி ஏரியில் 749 ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றக்கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் அடிப்படையில் பெறப்படும் பதிலைப் பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், ‘வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் குடியிருப்போர் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பாதாள சாக்கடை இணைப்பு பெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை அமைக்கும் பணி வருகிற செப்டம்பர் மாதம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி ஏரி பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் பாதாள சாக்கடை இணைப்பு பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
வேளச்சேரி ஏரியின் சில பகுதிகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை போன்ற பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஏரி இடத்தை அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கியது எப்படி, இதற்கு யார் அனுமதி அளித்தது என்பது குறித்து நீர்வள ஆதார அமைப்பு பதில் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 23ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.