வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வட மாநில தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வர்த்தகத்திற்காக, தொழிலுக்காக, மருத்துவத்துக்காக, கல்விக்காக,வேலைக்காக என பல்வேறு மாநில மக்கள் தமிழகத்திற்கு வருவது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் தாங்களும் உயர்ந்து, தமிழகத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள். சமீப காலமாக வேலை வாய்ப்புகளைத் தேடி அனைத்து மாநிலத் தொழிலாளர்களும் தமிழகத்திற்கு வருவது அதிகரித்து வருகிறது.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த அமைதிமிகு சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டினை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது. இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் இங்கு நிலவும் இயல்பான சூழ்நிலை தெரியும். அதனால்தான், தற்போதும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு தொழிலாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தமிழகம் எப்போதும் போல் வரவேற்கின்றது.
வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழகத்தில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து, இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழக மக்களும் இருப்பார்கள் என்பதை இங்குள்ள தொழிலாளர் சகோதரர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்வதோடு, தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவோர் தங்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை உணர்ந்தும், ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பிஹார் மாநில முதல்வர், எனது பெருமதிப்பிற்குரிய சகோதரர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இது தொடர்பாக நான் பேசி இருக்கிறேன். அனைத்துத் தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என்பதையும் அவருக்கு உறுதியாகச் சொல்லி இருக்கிறேன். வளமான, அமைதியான தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்” என முதலவ்ர் கூறியுள்ளார்.