தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு உக்கடையில் அமைந்துள்ள இரயில் பாதை கடக்கும் சாலை நிலை மிகவும் மோசமாக பழுதடைந்து, ஆபத்தான நிலையில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தலாக உள்ளது.
இதேபோன்று இந்த இடத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மோசமான நிலையில் இருந்த இரயில் பாதை கடக்கும் சாலை அனைத்தும் சீர் செய்யப்பட்ட நிலையில் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கும் சாலையின் நிலை இன்றும் சீர் செய்யப்படாமல் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான நிலை தொடர்கிறது.
இதன் காரணம் பற்றி விசாரணை செய்த போது, நமக்கு கிடைத்த தகவல்கள் இவை:
அதாவது ஒட்டங்காடு உக்கடையை சுற்றி உள்ள கிராமப்புறங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் நீர் வாய்க்கால் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதாகவும், இதற்காக இயக்கப்படும் கனரக வாகனங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட இந்த சாலை வழியாகவே செல்வதாகவும் தெரிய வருகிறது.
மேலும், இந்த குறிப்பிட்ட சாலை கனரக வாகனங்கள் இயக்குவதற்காக திட்டம் செய்யப்படவில்லை என்பதும் கனரக வாகனங்கள் இயக்குவதற்காக திட்டம் செய்யப்பட்டு அதற்கேற்றபடி அமைக்கப்பட்ட சாலை ஊருக்கு வெளியே உள்ளது. ஆனால் அந்த சாலையை பயன்படுத்த வேண்டும் என்றால் சுமார் மூன்று கிலோமீட்டர் பயண தூரம் நீள்வதாகவும், இதனால் இந்த சாலையை குறுக்கு வழியாக அந்த மூன்று கிலோமீட்டர்களை தவிர்ப்பதற்காக கனரக வாகனங்கள் பயன்படுத்துவது தெரிய வருகிறது.
சம்பந்தப்பட்ட இரயில்வே துறையில் விசாரிக்கும் போது, அந்த குறிப்பிட்ட சாலையை நாளைக்கே அவர்கள் சரி செய்து தர தயாராக இருப்பதாகவும், இந்த சாலைக்குண்டான திட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து நிதி ஒதுக்கீடும் கையில் இருந்தாலும், இரயில் பாதையில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தூரம் மட்டுமே எங்கள் துறையை சாரும் என்றும், அதன் தொடர்ச்சி பஞ்சாயத்தையே சாரும் என்றும் தற்சமயம் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து துறை ஒத்துழைப்பு இல்லாததன் காரணமாக இந்த சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது.
இந்த குறிப்பிட்ட சாலை வெகுஜன மக்கள் அன்றாட போக்குவரத்துக்காக பயன்படுத்துவதற்காகவும், பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல இயக்கப்படும் வாகனங்களுக்காகவும் மட்டுமே திட்டமிடப்பட்டதாகவும் இருக்கும்போது, இதில் கனரக வாகனங்களை இயக்குவதால் சாலை எத்தனை முறை பழுது பார்த்தாலும், பழுது பார்த்த வேகத்தில் சேதம் அடைவதாக இரயில்வே துறையினர் வருத்தம் தெரிவித்தனர்.
இந்த சாலை வழியாக தினமும் பத்திற்கு மேற்பட்ட தனியார் கல்வித் துறை வாகனங்கள் இயக்கப்படுகிறது. மேலும் நவக்கொல்லைக்காடு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு செல்லும் முக்கியசாலையாக இது இருப்பதால் ஒரு நாளைக்கு இவ்வழியே சுமார் 400 முதல் 500 பேர் உபயோகப்படுத்துகின்றனர்.
இப்படி இருக்கும் நிலையில் காலையிலும், மாலையிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் ஆபத்தான இந்த சாலையை கடந்து செல்லும்போது, பலமுறை விபத்துகள் ஏற்பட்டிருப்பதும், மழைக்காலங்களில் பள்ளி வாகன ஓட்டுனர்கள் மிகவும் ஆபத்தான இந்த சாலையில் வாகனங்கள் இயக்குவதற்கு அச்சமாக இருப்பதாகவும், எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறுவதாலும், கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயப்படும் சூழல் உருவாகியுள்ளது.
நெருக்கடியான நேரத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மற்றும் கல்வித் துறை அமைச்சர் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு பல புதிய சிறப்பு திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தி வரும் நிலையில் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களே பயப்படும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது என்னும்போது வருத்தமாக உள்ளது.
சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனே தலையிட்டு இந்த பிரச்சனையை சரி செய்து தமிழ்நாடு அரசின் பெருமை காப்பார்களா? அல்லது உயிர் பலியானால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்களா? எப்போது இந்த சாலைக்கு விடிவு பிறக்கும்?