ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தமிழக அரசின் துரித மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2022-23-ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் மின் மோட்டார் குதிரைத்திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் ஆதி திராவிடர்களுக்கு 900 இணைப்பு, பழங்குடியினருக்கு 100 இணைப்பு என மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விவசாயிகளாகவும் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் இணையதள முகவரியில், நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், “பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.