கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சீர்காழி நகர்மன்றக்கூடத்தில் 2-ஆவது நாளாக நடந்துவந்த நகர்மன்ற உறுப்பினர்களின் உள்ளிருப்புப் போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கைவிடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் தலைவர் துர்கா பரமேஸ்வரி (திமுக) தலைமையில் செவ்வாய்க் கிழமை மாலை நடைபெற்றது. தலைவர் உட்பட 24 உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் திமுக, தேமுதிக, மதிமுக, அதிமுக பாமக, சுயேச்சை உள்ளிட்ட 12 நகர்மன்ற உறுப்பினர்கள் கடந்த ஓராண்டாக கூட்டத்தில் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். மன்றக்கூடத்தில் உணவருந்தி இரவு முழுவதும் அங்கேயே உறங்கினர்.
உள்ளிருப்பு போராட்டம் நடத்திய உறுப்பினர்களுக்கு ஆதரவாக வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மதிமுக மாவட்டச்செயலாளர் இ.மார்கோனி தலைமையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டம் செய்ததோடு, தர்னாவிலும் ஈடுபட்டனர். அவர்களிடம் சீர்காழி டிஎஸ்பி லாமெக் பேச்சுவார்த்தை நடத்தியபின் தர்ணாவைக் கைவிட்டு அங்கேயே குவிந்திருந்தனர்.
இதனிடை யே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்களிடம் சீர்காழி கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, வட்டாட்சியர் செந்தில்குமார், நகராட்சி மண்டல இயக்குநர் (பொ) பார்த்திபன் மற்றும் காவல்துணை கண்காணிப்பாளர் லாமெக் ஆகியோர் சுமார் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து மயிலாடுத்துறை ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கூறுகையில், தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை, குப்பைகள் அகற்றப்படுவதில்லை, தற்காலிக மயானத்தில் மேற்கூரை சீரமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். நகராட்சி ஆணையரிடம் போர்கால அடிப்படையில் அனைத்து வார்டுகளிலும் குப்பைகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி வருமானத்தை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் உறுப்பினர்களின் கோரிக்கைகளை 1 வார காலத்திற்குள் நிறைவேற்றிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்பேரில் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருகிறோம் என கூறி போராட்டத்தினை வாபஸ் பெற்றனர் என்றார்.
உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற 4-ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் ரமாமணி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.